பெங்களூரை சேர்ந்தவர் நடிகை ஆமனி. கேப்டன் விஜயகாந்தின் ஆனஸ்ட் ராஜ் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தவர். சென்னையை சேர்ந்த தயாரிப்பாளர் காஜா முகைதீனை திருமணம் செய்து கொண்ட அவருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.

ஆமனி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 47 வயதாகும் ஆமனி சிறு பட்ஜெட் தெலுங்கு படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலத்தில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஆமனி திடீர் என்று தனக்கு நெஞ்சுவலிப்பதாகக் கூறினார்.

இதையடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் பயப்படும்படி எதுவும் இல்லை என்றார். சில பரிசோதனைகள் செய்யப்பட்டு, சிகிச்சைக்கு பிறகு ஆமனி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தால் படப்பிடிப்பு நடந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை தெரிந்த பிறகே படக்குழுவினர் நிம்மதி அடைந்தனர். அந்த படத்தின் ஷூட்டிங் இந்த வாரம் தான் துவங்கியது. கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீராததால் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் கதாநாயகியின் அம்மாவாக செளந்திரவள்ளி என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தெலுங்கு நடிகை ஆமனி.

தெலுங்கு படமான ஜம்ப லக்கிடி பாம்பா படத்தில் நரேஷுக்கு ஜோடியாக ஆமனி அறிமுகமானார். இதையடுத்து, அக்கினேனி நாகார்ஜுனா, நந்தமுரி பாலகிருஷ்ணா, கிருஷ்ணா, ஜகபதி பாபு மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.