டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணி வன்முறைக்கு பிறகு 100 க்கும் மேற்பட்டோர் திடீரென்று மாயமாகி உள்ளதால், சக விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லியின் எல்லை பகுதியில் விவசாயிகள் கடந்த 2 மாத்திற்கும் மேலாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தான், கடந்த 26-ந் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில், பெரும் வன்முறை மூண்டது.

டிராக்டர் பேரணியின் போது விவசாயிகள் செங்கோட்டைக்குள் சென்று, அங்கு கொடி ஏற்றினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது, அப்போது, பெரும் கலவரம் வெடித்ததாகவும் கூறப்பட்ட நிலையில், இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளைச் சிலர் எதிர்மறையாகச் சித்தரித்தனர். இதனையடுத்து, “உரிமைக்காகப் போராடும் விவசாயிகளைக் கொலைகாரர்களாகச் சித்தரிப்பதா?” என்று, கேள்வி எழுப்பி முதலமைச்சருக்கு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கேள்வியை எழுப்பி கோரிக்கை கடிதம் அளித்தார்.

இதனையடுத்து, “என்னை வாளால் வெட்ட வந்தார்கள் மற்றும் எங்களைத் தாக்கியது குண்டர்களே தவிர, விவசாயிகள் அல்ல” என்று, தாக்குதலுக்கு ஆளான டெல்லி போலீசார் பேட்டி அளித்தனர். இதுவும், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், விவசாயிகளின் இந்த டிராக்டர் பேரணியை தொடர்ந்து, மீண்டும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். ஆனால், இந்த பேரணி மற்றும் வன்முறை சம்பவத்துக்குப் பிறகு சுமார் 100 க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று, சக விவசாயிகள் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு உள்ளனர்.

இதனால், “இது தொடர்பாக ஆய்வு செய்ய 6 பேர் குழு ஒன்றை அமைத்துள்ள விவசாயிகள், போராட்ட களத்தில் இருந்து திடீரென்று மாயமானவர்களின் விவரங்களை இந்த குழுவினர் சேகரித்து, அது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவிப்பார்கள்” என்று, சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு தற்போது கவலையுடன் தெரிவித்து உள்ளது.

மேலும், “பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக போராட்டக் களத்தில் போராடிய போது, மாயமான சக விவசாயிகள் பற்றி தகவல் தெரிந்து கூறுவதற்கு எளிதாக செல்போன் எண் ஒன்றையும் அவர்கள் தற்போது வெளியிட்டு” உள்ளனர்.

அத்துடன், விவசாயிகளின் போராட்டக்களங்களில் பொது மக்களை அனுமதிக்காத போலீசாரின் செயலுக்கு, விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இது போராட்டக்காரர்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை நிறுத்துவதற்கான சதி என்றும் அவர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி உள்ளனர்.

அதே போல், டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்ததின் காரணமாக, கடந்த 29 ஆம் தேதி, டெல்லி சிங்கு எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் நடந்தது.

அதன் தொடர்ச்சியாக அங்கு அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால், பதற்றம் நிலவுவதாகவும் குறிப்பிட்ட சில ஊடகங்கள் மட்டும் செய்தி வெளியிட்டன. 

இதனால், டெல்லியை ஒட்டியுள்ள அரியானா மாநிலத்தில் 3 மாவட்டங்களில் இணைய சேவை ஏற்கனவே துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் அங்குள்ள அம்பாலா, ரோதக், பானிபட் உள்பட மேலும் 14 மாவட்டங்களில் இணைய சேவையை அரியானா மாநில பாஜக அரசு தற்போது துண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது, பாஜகவிற்கு மேலும் அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது என்று, இணையத்தில் பலரும் விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர்.