60 வயது மூதாட்டியை,  30 வயது இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தலைநகர் டெல்லியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

டெல்லி அடுத்து உள்ள டல்லூபுரா கிராமத்தைச் சேர்ந்த வாடகை வீட்டில் 60 வயதான மூதாட்டி ஒருவர் தனது மகன் மற்றும் தனது உறவினருடன் வசித்து வந்தார்.

அத்துடன், 60 வயதான அந்த மூதாட்டி வேலை விசயமாக டெல்லி நகருக்கு வந்திருக்கிறார். ஆனால், அதன் பிறகு அவர் தனது கிராமத்திற்குத் திரும்பவில்லை.

இதனால், டெல்லி நகருக்குச் சென்ற தனது தாயார் வீடு திரும்பவில்லை என்று, அவரது மகன் ஒரு பக்கம் தேடி வந்த நிலையில், அந்த 60 வயதான மூதாட்டி, டெல்லியின் புது அசோக் நகர் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு நிர்வாண கோலத்தில் சடலமாகக் கிடந்து உள்ளார்.

இது குறித்து, அந்த வழியாகச் சென்ற பொது மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த போலீசார், சடலமாகக் கிடந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மூதாட்டியின் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகன் கூறும்போது, “எனது தாயார் தரையில் நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்ததாக” குறிப்பிட்டார். 

மேலும், “எனது தாயாரின் தொண்டை பகுதியில் மிகவும் கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்ட காயம் இருந்தது” என்றும், அவர் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், இதே போன்ற ஒரு சம்பவம், டெல்லி வடக்கு பகுதியில் உள்ள புராரியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன் தினம் இரவு 65 வயதான மூதாட்டி ஒருவர் தனது தொண்டை அறுப்பு மற்றும் இடது காலில் சில தீக்காயங்களுடன் காணப்பட்டதாக மற்றொரு புகார் ஒன்று, அங்குள்ள காவல் நிலையத்தில் பதிவாகி உள்ளது. 

இப்படி, வயதானவர்களைக் குறிவைத்து மிகவும் கொடூரமாக நிகழ்த்தப்படும் இது போன்ற சம்பவங்கள் குறித்து, டெல்லி போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வில், பாதிக்கப்பட்ட மூதாட்டியின் வீட்டை ஒட்டிய 30 வயது இளைஞரை அந்த பகுதி போலீசார் தற்போது அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, மூதாட்டியின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே அந்த மூதாட்டி பாலியல் பலாத்கார போராட்டத்தில் தான் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காகக் கொலை செய்யப்பட்டாரா? என்கிற உண்மை தெரிய வரும் என்றும், போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.