பெற்றோர் செய்து வைத்த கட்டாய திருமணம் பிடிக்காமல், பெற்றோர் மற்றும் கணவனைப் பிரிந்து இளம் பெண், தனது காதலனுடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம் சுல்தான்காஞ்ச் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் அனு குமாரியும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆஷூ குமார் என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களாக அறிமுகம் ஆகி உள்ளனர். அதன் பிறகு, அவர்களுக்குள் காதல் மலர்ந்து உள்ளது. இதனையடுத்து, அவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்துள்ளனர்.

மகளின் காதல் விவகாரம், அந்த பெண்ணின் பெற்றோருக்குத் தெரிய வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அத்துடன், தனது மகளை வீட்டை விட்டு வெளியே செல்லவும் அவரது பெற்றோர் அனுமதிக்கவில்லை. மகள் அனு குமாரியின் காதல் விவகாரம் ஊராருக்குத் தெரியும் முன்பு, அவருக்கு எப்படியும் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவரது பெற்றோர், அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலத்தைத் தொடங்கி உள்ளனர்.

ஆனால், இளம் பெண் அனு குமாரியோ தனது காதலனைத் தவிர, வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று, பிடிவாதமாக இருந்து உள்ளார்.
இதனால், இன்னும் கோபம் அடைந்த அவரது பெற்றோர், அவசர அவசரமாக மாப்பிள்ளையைப் பார்த்து உள்ளனர்.

அதன் படி, அங்குள்ள கிரான்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்குத் தனது மகள் அனுகுமாரிக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்து உள்ளனர். 

அந்த நேரத்தில், தனது பெற்றோரை மீறி தன்னால் எதுவும் செய்ய முடியாமல், பெற்றோர் விருப்பமே இல்லாமல் அந்த திருமணத்துக்கு உடன்பட்டு, பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்து உள்ளார்.

திருமணத்திற்கு பிறகும், காதலனை மறக்க முடியாமல் அந்த பெண் கடந்த 2 மாதங்களாகத் தவித்து வந்துள்ளார். 

ஒரு கட்டத்தில், தீர்க்கமாக முடிவு செய்த அந்த பெண், வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து அதற்கான நேரம் பார்த்துக் காத்திருந்து உள்ளார். 

இந்த நிலையில் தான், கடந்த நாட்களுக்கு முன்பு அந்த பெண், தனது கணவன் வீட்டை விட்டு வெளியேறி, தனது காதலனை சந்தித்து உள்ளார். 

அப்போது, அங்குள்ள சுல்தான்கஞ்ச் ரயில் நிலையத்துக்கு வந்த அந்த காதல் ஜோடிகள், பெங்களூருவுக்கு செல்ல தயார் நிலையிலிருந்த ரயிலில் ஏறி அந்த ரயிலிலேயே திருமணம் செய்துகொண்டனர். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் ஆச்சரியமாகவும், வியப்பாகவும் பார்த்து உள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.