உத்தரப் பிரதேசத்தில் 180 அடி ஆழம் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன், சுமார் 9 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டான்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் தரியாய் கிராமத்தைச் சேர்ந்த சோட்லால் என்பவரின் 4 வயதான ஷிவா என்ற குழந்தை, நேற்றைய தினம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது, வீட்டின் அருகில் மூடப்படாமல் கிடந்த சுமார் 180 அடி ஆழம் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்து உள்ளது.

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தந்தை, சத்தம் போட்டு கத்தி உதவிக்கு ஆட்களை அழைத்தார். இதனால், ஓடி வந்த அக்கம் 
பக்கத்தினர், உடனடியாக அங்குள்ள காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அத்துடன், இவர்களுடன், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் என 30 கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அந்த ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் இருந்த இடத்தை அறிந்துகொண்ட மீட்புக் குழுவினர், சிறுவன் உயிருடன் இருப்பதையும் உறுதி செய்துகொண்டு, முதல் நடவடிக்கையாக ஆக்ஸிஜன் கொடுத்து, சிறுவன் மூச்சு விடும் படி உதவினர். அதன் தொடர்ச்சியாக, குழாய் மூலம் குளுகோசும் வழங்கினார்கள். 

அத்துடன், உள்ளே கேமரா அனுப்பி சிறுவனை மீட்பு குழுவினர் கண்காணித்தனர். அப்போது, அந்த சிறுவன் மேலே தூக்கி அசைத்தபடி இருந்தான். இதனால், கயிற்றைக் கட்டி, சிறுவனின் கையில் மாட்டி, அவனை பத்திரமாக மீட்கவும் போலீசார் முடிவு செய்தனர். அதன் படி, சிறுவனின் நடவடிக்கைகளை மீட்புக்குழுவினர் கேமரா மூலம் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதன் படி, இதனிடையே சிறுவன் விழுந்த இடத்துக்கு அருகே மற்றொரு குழி தோண்டப்பட்டது. ஒரு நொடியைக் கூட வீணாக்காமல், மீட்புக் குழுவினர் வெவ்வேறு உத்திகளைக் கையாண்டனர்.

அதே நேரத்தில், ஆக்ராவில் முகாமிட்டிருந்த ராணுவ வீரர்களும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு அருகில் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அதன் படி, 90 அடி வரை அவர்கள் பள்ளம் தோண்டி விட்டனர். இதனையடுத்து, அங்கிருந்து சுருக்கு போட்ட கயிற்றை அந்த ஆழ்துளைக் கிணற்றில் இறக்கி, லாவகமாக சிறுவனின் கையில் மாட்டி, சிறுவனை மெல்ல மெல்ல மேலே தூக்கி பத்திரமாக மீட்டனர்.

கிட்டத்தட்ட 9 மணி நேரம் தொடர்ந்து போராடி சிறுவன் ஷிவாவை பத்திரமாக மீட்டனர். அப்போது, சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை சோர்வாக இருந்ததால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

சிறுவனை பத்திரமாக மீட்ட மீட்புப் படையினருக்கு, அந்த கிராம மக்கள் மற்றும் சிறுவனின் குடும்பத்தினரும் நன்றி தெரிவித்தனர். தற்போது, மருத்துவமனையில், சிறுவன் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

இதனிடையே, “சிறுவனை மீட்க துரதிமாக செயல்பட்டதே காரணம்” என்று, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முனிராஜ் தெரிவித்துள்ளார். இவர், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.