திருமணமான இரண்டாம் நாளே, தனது முன்னாள் காதலனை, முன்னாள் காதலி கடத்திச் சென்று அடித்துக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியைச் சேர்ந்த 26 வயதான சோனு படேல், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இதனையடுத்து மதுவிடம் விசாரணை மேற்கொண்டதில் சோனுவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 

சோனு படேலின் தங்கைக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மதுவின் சகோதரனுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று உள்ளது. 

இதனையடுத்து, சோனுவுக்கும் - மதுவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் நெருக்கமாகப் பழகிக் காதலித்து வந்துள்ளனர். அவர்கள் இருவரும், அந்த பகுதியில் காதலர்களாக ஊர் சுற்றி வந்ததை, பலரும் பார்த்து உள்ளனர்.

இப்படியான நிலையில் தான், சோனு படேலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடந்து முடிந்துள்ளது. 

இந்த நிலையில் தான், திருமணம் முடிந்த அடுத்த 2 வது நாளே, “செல்போனை பழுது பார்த்துவிட்டு வருகிறேன்” என்று, வீட்டில் கூறிவிட்டு, தனது முன்னாள் காதலியை சமாதானம் செய்யும் நோக்கத்தில், அவரை சந்திக்க வந்துள்ளார். 

அப்போது, முன்னாள் காதலன் சோனு மீது கடும் கோபத்தில் இருந்த இளம் பெண் மது, அவரை கல்லால் அடித்தே கொலை செய்து உள்ளார். இதில், படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, அங்குள்ள சிகோரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. 

இது குறித்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அந்த உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

போலீசாரின் இந்த விசாரணையில், காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் சோனு படேல் என்பது உறுதியானது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த சோனுவுக்கும், அவரது உறவினரான இளம் பெண் மதுவுக்கு இடையே காதல் இருந்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து, மதுவை விசாரணை வலையத்தில் கொண்டு வந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இளம் பெண் மதுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “சோனுவை கொலை செய்ததை” அவர் ஒப்புக்கொண்டார்.

குறிப்பாக, “திருமணத்துக்கு சில நாள்களுக்கு முன்பு இளம் பெண் மதுவுடன், சோனு மிகவும் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றை எடுத்து உள்ளார். இந்த வீடியோவை மணமகள் வீட்டில் காண்பித்தால் திருமணம் தடைப்படும் என்று கூறி மது மிரட்டி வந்த நிலையில், அவரை சமாதானப்படுத்த வந்த போது, இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக” அவர் கூறியுள்ளார்.

இந்த கொலை வழக்கில், இளம் பெண் மதுவுக்கு உடந்தையாக இருந்த உறவினர் ஒருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.