தமிழ் திரையுலகில் ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து பின்னர் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகனாக உயர்ந்து நிற்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. 

இயக்குனர் நலன் குமாரசாமியின் இயக்கத்தில் வெளிவந்த சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் தமிழக மக்களிடையே மிகப் பிரபலமடைந்த நடிகர் விஜய் சேதுபதி, தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சேதுபதி, நானும் ரவுடிதான், தர்மதுரை, சூப்பர் டீலக்ஸ் என தொடர்ந்து பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் சிறந்த திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தார். 

இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் வேதா திரைப்படத்தில் வேதா கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி விக்ரம் வேதா திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் பட்டியலில் இணைந்தார். அதை தொடர்ந்து  இந்த வருடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக பவானி கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார் விஜய் சேதுபதி. 

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணப் பணிகளுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதி உதவி செய்யுமாறு முதல்வர் கேட்டுக் கொண்டதன் பேரில் பலரும் நிதி உதவி அளித்து வருகிறார்கள். முன்னதாக திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்களும் முன்வந்து நிதி உதவி செய்தது குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து  கொரோனா நிவாரண பணிகளுக்கான நிதி உதவியாக 25 லட்ச ரூபாயை வழங்கியுள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்துள்ள இந்த பேருதவி தற்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.