தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் இயக்குனராகவும் திகழ்ந்த கங்கை அமரன் அவர்களின் மகன்களான இயக்குனர் வெங்கட் பிரபுவும் பிரேம்ஜி அமரனும் திரையுலகில் ஜொலித்து வருகின்றனர். ராப் பாடகராக திரையுலகில் அறிமுகமான பிரேம்ஜி, நடிகர் சிலம்பரசன் இயக்கி நடித்த வல்லவன் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பிரேம்ஜியின் சகோதரரும் இயக்குனருமான வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்த  சென்னை 600028 திரைப்படத்தின் சீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப் பிரபலம் அடைந்தார். 

தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய சரோஜா ,கோவா, மங்காத்தா என தொடர்ந்து தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து வெளிவர உள்ள மாநாடு  படத்தில் பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இன்று நடிகர் பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. லோக்கல் ரவுடியை போல ஒரு கையில் சைக்கிள் செயின்  மறு கையில் சாராய பாட்டில், பர்மா லுங்கி, வாயில் சிகரெட் என மாஸான லுக்கில் இருக்கும் இத்திரைப்படத்திற்கு  “தமிழ் ராக்கர்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. ஜஸ்வந்த் சூப்பர் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.பிச்சாண்டி தயாரிக்கும் இத்திரைப்படத்தை இயக்குனர் பரணி ஜெயபால் இயக்குகிறார். 

தமிழ் ராக்கர்ஸ் திரைப்படத்திற்கு கதாநாயகனான பிரேம்ஜி அமரன் இசை அமைக்கிறார். பிரேம்ஜி அமரனின் தந்தையும் பாடலாசிரியருமான கங்கை அமரன் திரைப்படத்திற்கான பாடல்களை எழுத உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பார்த்தவுடன் அனைவரையும் கவரும் விதமாக இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

இதுவரை நகைச்சுவை கதாப்பாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்த பிரேம்ஜி அமரன் எடுத்துள்ள இந்த ஹீரோ அவதாரம் வெற்றிபெற வாழ்த்துவோம். “எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா”.