பணத்திற்காக 3 ஆண்களை மோசடியாக ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட கல்யாண ராணியை போலீசார் தீவிரமாகத் தேடி வரும் சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் விஜயபுரம் மண்டலம் நரபுராஜு கண்ரிகாவைச் சேர்ந்த 29 வயதான சுனில் குமார், அங்குள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். 

இந்த இளைஞரிடம், “திருப்பதி ஏடிபி நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக” கூறி, சுகாசினி என்ற இளம் பெண் அறிமுகம் ஆகி உள்ளார்.

இதனையடுத்து, அவர்கள் இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்தனர். நேரிலும் அடிக்கடி சந்தித்து வந்தனர். இந்த சந்தர்ப்பத்தில், சுனில்குமாருடன் நெருக்கமான நட்பை உருவாக்கிக்கொண்ட இளம் பெண் சுகாசினி, அந்த இளைஞரை தனது காதல் வலையில் வீழ்த்தி உள்ளார்.

அந்த இளைஞர், சுகாசினியும் காதலிக்கத் தொடங்கிய பிறகு, இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றி உள்ளனர். அப்போது, சமயம் பார்த்து, “எனக்கு பெற்றோர் இல்லை என்றும், நான் யாரும் ஆதரவற்ற பெண்” என்றும் கூறி, அந்த இளைஞனை நம்ப வைத்து உள்ளார்.

இதனையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காதலன் சுனில் குமாரை அந்த இளம் பெண் திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின் போது, சுனில் குமாரின் குடும்பத்தினர் சுகாசினிக்கு 3 சவரன் தங்க நகைகளை போட்டு உள்ளனர்.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய திட்டம் போட்ட சுகாசினி, “என்னை சிறுவயதில் இருந்து வளர்த்து வந்த என் மாமாவிற்கு உடல் நலம் சரியில்லை என்றும், அவரை மருத்துவமனையில் சேர்த்து கூட இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று, கணவன் சுனில் குமாரிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு உள்ளார்.

இதனையடுத்து, கடந்த 7 ஆம் தேதி அன்று, மகன் சுனில் குமாரிடம் இருந்து பணம் பெற்றதை தெரிந்துகொண்ட மாமானார் மாமியார், சுகாசினியிடம் சென்று “வாங்கிய பணத்தை என்ன செய்தாய்?” என்று கேட்டு உள்ளனர்.

இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், அன்றைய தினமே சுகாசினி, அந்த வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகி உள்ளார்.

அத்துடன், சுகாசினியின் செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. இதனால், சற்று சந்தேகம் அடைந்த கணவன் சுனில் குமார், மனைவியின் ஆவணங்களை எடுத்து சரிபார்த்து உள்ளார். 

அப்போது, சுகாசினியின் ஆதார் அட்டையில் உள்ள முகவரி அடிப்படையில் சுகாசினியை தேடிச் சென்றபோது, அங்குள்ள நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் ஏற்கனவே சுகாசினிக்கு திருமணம் ஆகி ஒரு மகள் இருப்பது தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சுனில்குமார், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கடும் மன உளைச்சலில் இருந்து உள்ளார். அப்போது, சுனிகுமாரை தொடர்பு கொண்ட சுகாசினி, “நான் இப்போது ஐதராபாத்தில் இருக்கிறேன் என்றும், உங்களிடம் வாங்கிய பணத்தை விரைவில் தருகிறேன் என்றும், அதற்கு மாறாக நீங்கள் காவல் நிலையம் தேடிச் சென்றால் தேவையில்லாத பிரச்சனை தான் வரும்” என்றும், அவர் மிரட்டியதாகத் தெரிகிறது. 

குறிப்பாக, வெங்கடேசை திருமணம் செய்து கொள்வதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, சுகாசினி வேற ஒருவரை திருமணம் செய்ததும், அது தொடர்பான அதரங்களும் சுனிலுக்கு தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியும் பீதியும் அடைந்த அவர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக சுகாசினி மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள சுகாசினியை மிகத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.