சினிமாவில் வருவதைப் போன்றே, போலீஸ் வாகனம் மீது கல்வீசி கைதியை ஒரு கும்பல் மீட்டுச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, மகாராஷ்டிரா மாநிலம் கல்யாணில் இருந்து கசாரா செல்லும் சாலையில் அம்பிவிலி ரயில் நிலையம் இருக்கிறது. 

இந்த ரயில் நிலையம் அருகில் வசித்து வரும் கும்பல் ஒன்று, அந்த பகுதியில் நகை திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இப்படியான சூழ்நிலையில், திருட்டால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், மிராபயந்தர் - வசாய்விரார் குற்றப் பிரிவு போலீசார், குறிப்பிட்ட அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவரை பிடிக்க தங்களது வாகனத்தில் அங்குள்ள இராணிபாடா பகுதிக்குச் சென்றனர்.

அப்போது, திருட்டு குற்றச்சாட்டுக்கு ஆளான சம்மந்தப்பட்ட நபரை போலீசார் அங்கு சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்தனர். இதனையடுத்து, பிடிபட்ட நபரை காரில் ஏற்றி விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் செல்ல, அங்கிருந்து புறப்பட்டனர்.

போலீசாரின் அந்த வாகனமானது, அங்குள்ள அம்பிவிலி ரயில் நிலையம் நோக்கி சென்றுகொண்டு இருந்தது. அப்போது, அங்கு ரயில்வே வழித் தடத்தில் சிக்னல் போடப்பட்டு இருந்ததால், அந்த வாகனம் அந்த சிக்னல் முன்பு நடுவழியில் நின்றுகொண்டு இருந்தது. 

அப்போது தான், அங்குள்ள இராணிபாடாவை சேர்ந்த அந்த கொடூர கும்பல், திரண்டு வந்து போலீசார் பிடித்து வைத்திருந்த நபர் இருந்த கார் மீது, கல்லை வீசி அதிரடியாகத் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டது ஆண்கள் மட்டும் அல்லாது பெண்களும் ஈடுபட்டனர். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே திகைத்து நின்றனர். 

அதே நேரத்தில், அந்த போலீசார் தங்களைத் தற்காத்துக்கொள்ள நினைத்தனர். ஆனாலும், இந்த கும்பலின் திடீர் தாக்குதலால் 3 போலீசார் காயம் அடைந்தனர்.

அத்துடன், இந்த அசாரமான சூழலைப் பயன்படுத்திக்கொண்ட அந்த கும்பல், போலீசார் வாகனத்தில் கைதாகி இருந்தவரை அதிரடியாக மீட்டு அழைத்துச் சென்றனர்.

மேலும், இந்த கல் வீச்சு தாக்குதலில் காயமடைந்த 3 போலீசாரும், சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசாரின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள கடக்பாடா போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, சினிமா பட பாணியில் போலீசார் மீது தாக்குதல் நடத்திவிட்டு, கைதான நபரை ஒரு கும்பல் மீட்டுச் சென்றுள்ள சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.