2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டோரை கடந்த 2017 ஆம் ஆண்டு டெல்லி சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி அமர்வு முன் நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று, சிபிஐ, அமலாக்கத் துறை சார்பில் வாதிடப்பட்டது.

வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி, 2ஜி வழக்கின் பிரதான மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்ய சிபிஐ,  அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டது.இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களில் ஒரு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக, அமலாக்கத் துறை பதில் அளிக்க, 10 நாள்கள் அவகாசம் அளித்தும்,விசாரணையை ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். பின் அதுவும் ஒத்திப்போனது.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயராம் முன்பு இந்த அவசர மனுவை தாக்கல் செய்துள்ள சஞ்சய் ஜெயின், இந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி சேத்தி நவம்பர் மாதம் ஓய்வு பெறவிருக்கிறார். அதனால் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்பதால் அதற்கேற்ப, வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரின் வாதங்களையும் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும்  என கோரியுள்ளார். கூடுதல் சொலிசிட்டர் சஞ்சய் ஜெயினின் இந்த அவசர மனு திடீர் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.

இதற்கிடையே, நீதிபதி சேத்தியிடம் உள்ள மேல்முறையீட்டு வழக்கினை எதிர்த்து ஆ.ராசா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையும் விரைவில் வரவிருக்கிறது. திமுகவுக்கு எதிரான 2 ஜி வழக்கில் செப்டம்பருக்குள் விசாரணையை முடித்து, நவம்பருக்குள் தீர்ப்பை வரவழைப்பதில் தீவிரம் காட்டுகிறது பாஜக என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் 2 ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இது பொது நலன் சார்ந்த வழக்கு, எனவே உடனடி விசாரணை தேவை என வாதிட்டார். 

இதனை தொடர்ந்து எதிர்தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், கொரோனா காலத்தில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி இந்த வழக்கினை விசாரிக்க வேண்டும் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி, வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.