நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பின் H.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் தல அஜித். போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். வலிமை படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து சென்னையில் ஒரு ஸ்டுடியோவில் ஷுட்டிங் நடந்தது. 

கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட வலிமை படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. அஜித் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்ற செய்திகள் இணையத்தில் கசிந்து வருகிறது. அஜித் தொடர்பான காட்சிகளை எடுக்க மட்டும் 30 நாட்கள் தேவையாம். இந்நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவுக்கு தல ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்கள். இவ்வளவு அன்பை எதிர்பார்க்காத கார்த்திகேயா அசந்து போய்விட்டார்.

தன் மீது பாசம் வைத்திருக்கும் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்னவென்பது கார்த்திகேயாவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. வலிமை பட அப்டேட் தான். வேறு எதை அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கப் போகிறார்கள். இதை புரிந்து கொண்ட கார்த்திகேயா ட்விட்டரில் தரமான பதிவு ஒன்றை செய்துள்ளார். 

அவரது பதிவில், என் பிறந்தநாள் அன்று அன்பை பொழிந்த தல அஜித் ரசிகர்களுக்கு என் நன்றி. நான் கடினமாக உழைத்து, அனைவரையும் பெருமைப்படுத்துவேன். கொஞ்சம் பொறுமையா இருங்க. நீங்க எதிர் பார்த்தத விட சிறப்பான ஒரு அப்டேட் வரப் போகுது. வலிமை தல தரிசனத்திற்கு காத்திருக்கிறேன்...
என்ன நான் சொல்றது என்று சுவையூட்டும் செய்தியை தன் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

கார்த்திகேயா RX 100 என்ற தெலுங்கு படத்தின் மூலமாக உலகளவில் பிரபலமானார். தற்போது இவர் வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தி அடிக்கடி வருவதை காண முடிகிறது. படக்குழுவினர் தரப்பிலிருந்து இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. வலிமை குறித்து ஏதாவது ஒரு அப்டேட் கிடைக்காதா என்று ஏங்கிக் கிடக்கும் அஜித் ரசிகர்களுக்கு கார்த்திகேயாவின் ட்வீட்டை பார்த்ததும் சந்தோஷம் தாங்க முடியவில்லை. இதையடுத்தே #Valimai என்கிற ஹேஷ்டேகுடன் அவர்கள் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கார்த்திகேயாவின் ட்வீட்டை பார்த்த அஜித் ரசிகர்கள் கூறியிருப்பதாவது, நல்ல வார்த்தை சொன்னீர்கள், நன்றி அண்ணா. அப்டேட்டுக்காக காத்திருக்கிறோம். மரண வெயிட்டிங். நாங்கள் எதை எதிர்பார்த்தோமோ அதையே சொல்லியிருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம். வலிமை படம் குறித்து வினோத்தோ, தயாரிப்பாளர் போனி கபூரோ அப்டேட் கொடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் கவலையில் இருந்த அஜித் ரசிகர்கள் கார்த்திகேயாவால் தற்போது சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தல அஜித்தின் வலிமை படத்தை இந்தியிலும் உருவாக்கி பான் இந்தியா படமாக வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வருவதால், இந்தி மொழியில் வலிமை படம் வெளியானாலும், நல்ல கலெக்‌ஷனை அள்ளும் என போனி கபூர் யோசனை செய்துள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின்றன. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் அப்டேட்டுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.