“இந்தி தெரியாதா? அப்ப உனக்கு லோன் இல்லை” என கங்கைகொண்டசோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரியின் அடாவடி பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளான தமிழர் ஒருவர், நீதிமன்றத்தை நாடி சென்று உள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன், தற்போது ஓய்வு பெற்று வீட்டில் வசித்து வருகிறார். மருத்துவர் பாலசுப்பிரமணியன், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனையில் மருத்துவராகச் சேவை ஆற்றி இறுதியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றவர். 

அதே நேரத்தில் மருத்துவர் பாலசுப்பிரமணியன், கங்கைகொண்ட சோழபுரம் அருகே இருக்கும் யுத்தப்பள்ளம் கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். அவருக்கு, அங்குச் சொந்தமாக நிலங்கள், வீடு ஆகியவை உள்ளன. 

அத்துடன், கங்கைகொண்டசோழபுரத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், கடந்த பல ஆண்டுகளாக வங்கி கணக்கு வைத்து, வரவு செலவுகளை நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே இருக்கும் இவருக்குச் சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிட்டார். அதற்காக, கங்கைகொண்டசோழபுரத்தில் இருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லோன் கேட்டு விண்ணப்பித்து உள்ளார்.

அந்த வங்கியில் தமிழ் பேசும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் வங்கியின் மேலாளராக இருந்த நிலையில்,  தற்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் பட்டேல் என்ற இந்தி மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட ஒருவர் வங்கியின் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

அப்படி இந்தி மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட வங்கி மேலாளர் விஷால் பட்டேலை சந்தித்து தன்னிடம் இருக்கும் எல்லா ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றைக் காண்பித்து லோனுக்காக விண்ணப்ப படிவத்தைக் கொடுத்து இருக்கிறார்.

அப்போது, வங்கியின் மேலாளர் விஷால் பட்டேல், லோன் கேட்டுச் சென்ற பாலசுப்ரமணியத்திடம், “உனக்கு ஹிந்தி தெரியுமா?” என்று ஆணவமாக  ஆங்கிலத்தில் கேட்டார் என்று கூறப்படுகிறது.

அதற்குப் பதில் அளித்த மருத்துவர் பாலசுப்ரமணியம், “எனக்கு இந்தி தெரியாது. ஆனால் தமிழும், ஆங்கிலமும் நன்றாகத் தெரியும்” என்று ஆங்கிலத்தில் பதில் அளித்திருக்கிறார். 

ஆனால், வங்கி மேலாளர், “நான் மகாராஷ்டிராவில் இருந்து வருகிறேன். எனக்கு இந்தி தெரியும், மொழி பிரச்சினை” என்று, ஆங்கிலத்தைத் தவிர்த்து இந்தியில் கூறியுள்ளார். அப்போது, தமிழ் - இந்தி மொழி அரசியல் பேசும் வங்கி அதிகாரியின் அலட்சிய ஆவன பேச்சைத் திசை திருப்பும் விதமாக, அந்த அரசு மருத்துவர் மீண்டும் தனது ஆவணங்களைக் காண்பித்து, “இதே வங்கி கிளையில் தான் நான் கணக்கு வைத்து இருக்கிறேன்.  என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளது” என்று மீண்டும் கூறி உள்ளார். ஆனால், அதற்குப் பதில் கூறாத அந்த வங்கி அதிகாரி, மீண்டும் மீண்டும் இந்தி மொழியின் பெருமை பற்றியும், மொழி அரசியலையும் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததாகக் கூறப்படுகிறது.

அத்துடன், மருத்துவர் காட்டிய லோன் தொடர்பான எந்த ஆவணத்தையும் பார்க்காமல், “கடன் கொடுக்க முடியாது” என்று, மிகவும் அலட்சியமாகவும், அடாவடியாகவும் அந்த வங்கி அதிகாரி பதில் அளித்ததாக மொழி அரசியலால் பாதிக்கப்பட்ட மருத்துவர் கவலைத் தெரிவித்தார்.

“இந்தி மொழி தெரியாது என்ற ஒரே காரணத்திற்காக, என் அடிப்படை உரிமையை மறுத்ததுடன், எனக்கு லோசன் தர முடியாது என்று அந்த அதிகாரி கூறியதால், நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன்” என்று பாதிக்கப்பட்ட மருத்துவர் வேதனையோடு தெரிவித்தார். 

மேலும், சம்மந்தப்பட்ட வங்கி அதிகாரி மீது “மான நஷ்ட ஈடு கேட்டு” அந்த மருத்துவர் நோட்டிஸ் ஒன்றையும் அனுப்பி உள்ளார். முக்கியமாக, இது தொடர்பாக நீதிமன்றம் செல்லப்போவதாகவும் பாதிக்கப்பட்ட மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 

இந்த விசயத்தை கேள்விப்பட்ட அந்த பகுதியைச் சேர்ந்த பல இளைஞர்களும், கடும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்து, லோன் கேட்டு வேண்டும் என்றே, அந்த அதிகாரியை நாடிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மீண்டும் “தமிழ்நாடு தனி நாடு கேட்கும் நிலை” மீண்டும் உருவாகும் சூழல் நிலவுகிறதோ என்ற அச்சமும், பயமும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இணைய வாசிகள் பலரும், இந்த செய்தியை வைரலாக்கி வருகின்றனர்.