மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு சமீபத்தில் நிறைவேற்றப்பட்டன.

ஆனால் இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலிதளம் கட்சியும் வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் நடந்த வாக்கெடுப்பிலும் எதிராக வாக்களித்தது.

ஆனால் எதிர்ப்புகளுக்கு மத்திய அரசு செவிசாய்ப்பதாக இல்லை. எதிர்ப்பின் நீட்சியாக, இன்று அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும் அளவுக்கு அவையில் அமளி ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவொருபக்கம் இருக்க, மற்றொரு பக்கம் மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ``வேளாண் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது இந்திய விவசாய வரலாற்றில் ஒரு திருப்புமுனை என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்த மசோதா வேளாண் துறையில் முழு மாற்றத்தையும் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழிவகை செய்யும்" எனல் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு உள்ளதாக பதிவிட்டுள்ள அவர், குறைந்தபட்ச ஆதார விலை, அரசே கொள்முதல் செய்யும் முறை ஆகியவை தொடரும் என மீண்டும் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் மட்டுமன்றி, ஆப்டிகல் பைபர் இணைய சேவையை துவங்கி வைத்த பின்னரும், மோடி இதுபற்றி பேசியுள்ளார். இதுபற்றி பிரதமர் மோடி பேசியதாவது: ``பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்காக விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். தற்போதைய நேரத்தில் விவசாயத்துறைக்கு சீர்திருத்தம் தேவைப்படுகிறது. அதனை எனது அரசு கொண்டு வந்துள்ளது. விவசாய மண்டிக்களுக்கு எதிராக இந்த மசோதாவில் ஏதும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். மண்டிக்களை நவீனப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்.

சிலருக்கு வேளாண் சீர்திருத்தம் பிடிப்பதில்லை. இதனால், வேளாண் மசோதாக்கள் விவகாரத்தில் சிலர் விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள். குறைந்தபட்ச ஆதார விலை கொள்கை கண்டிப்பாக தொடரும் என விவசாயிகளிடம் உறுதி அளிக்கிறேன். கொரோனா காலத்தில், ரபி அறுவடை காலத்தில், கோதுமையை அரசு, சாதனை படைக்கும் அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டது.

குறைந்தபட்ச ஆதார விலையாக விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் கோடி அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகம் ஆகும். வேளாண் மசோதா, விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதுடன், அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம்" இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் இந்தளவுக்கு எதிர்ப்பை தெரிவித்திருக்கும் நிலையில், மோடி இப்படி கூறியிருப்பது, சலசலப்பை அதிகப்படுத்தியுள்ளது.