மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு சமீபத்தில் நிறைவேற்றப்பட்டன.

ஆனால் இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலிதளம் கட்சியும் வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் நடந்த வாக்கெடுப்பிலும் எதிராக வாக்களித்தது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து, இந்த மசோதாவை சட்டமாக்க ஒப்புதல் அளிக்கக்கூடாதென, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறையிட காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இதன் தொடர்ச்சியாக, மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக, நாடு தழுவிய அளவில்போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. வரும் 24 ஆம் தேதி (செப்டம்ப்ர 24) நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில் திமுக, திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிவசேனா, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள்பங்கேற்கும் எனத் தெரிகிறது.

முன்னதாக, மத்திய வேளாண் மசோதாவை எதிர்த்து, மாநிலம் தழுவிய அளவிலான போராட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. வரும் 28 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் எனத் தெரிகிறது.

இந்த மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதுடன், காகிதங்களைக் கிழித்து அவையின் துணைத் தலைவர் மீது எறிய முயன்றனர். இதனால் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இதனையடுத்து அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக டெப்ரிக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜூ சதவ், கேகே ராஜேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நசீர் ஹூசைன், எலமாரன் கரீம் ஆகியோரை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து அவைத்தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து பார்லிமென்ட் வளாகத்தில் 8 எம்.பி.,க்களும் இரவு முழுவதும் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தர்ணாவில் ஈடுபட்டுள்ள எம்.பி.,க்களுக்கு இன்று (செப்.,22) காலையில் ராஜ்யசபா துணைத் தலைவர் ஹர்வன்ஷ் தேநீர் கொண்டு வந்து கொடுத்தார். ஆனால், அதனை வாங்க எம்.பி.,க்கள் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், ராஜ்யசபா தலைவரான வெங்கையா நாயுடுவுக்கு, துணைத்தலைவர் ஹரிவன்ஸ் எழுதிய கடிதத்தில், ‛ராஜ்யசபாவில் விவாதத்தின் போது தான் அவமதிப்பு செய்யப்பட்டேன். இதனால், கடந்த இரு நாட்களாக மன உளைச்சல் ஏற்பட்டு, தூக்கம் கூட வரவில்லை. இதனால், நாளை வரை ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக' அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசின் சார்பில், பிரதமர் மோடி, நேற்றைய தினம் இந்த மசோதா குறித்து பேசியிருந்தார். அப்போது அவர், ``வேளாண் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது இந்திய விவசாய வரலாற்றில் ஒரு திருப்புமுனை என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்த மசோதா வேளாண் துறையில் முழு மாற்றத்தையும் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழிவகை செய்யும். சிலருக்கு வேளாண் சீர்திருத்தம் பிடிப்பதில்லை. இதனால், வேளாண் மசோதாக்கள் விவகாரத்தில் சிலர் விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள்" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.