“விவசாயிகள் தற்கொலை பற்றிய தரவுகளை மாநில அரசுகள் வழங்குவதில்லை என்றும், அதனால் எங்களிடம் அது தொடர்பான தரவுகள் இல்லை” என்றும்,  மத்திய அரசு கை விரித்துள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இடையிலும் நாடாளுமன்றம் கூடி பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் கூடி விவாதித்து வருகிறது. அதன்படி, நேற்றைய முன் தினம் பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த விவசாயிகள் மசோதாக்களுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களும், பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வந்தன. ஆனால், அதையும் தாண்டி நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். 

எதிர்ப்பின் உச்சக்கட்டமாக நாடாளுமன்றத்திலேயே அவையை நடத்திய துணைத்தலைவர் முன்னிலையில் சட்ட புத்தகத்தைக் கிழித்து வீசி தங்களது எதிர்ப்புகளைக் கடுமையாகப் பதிவு செய்தனர். அத்துடன், அவையை நடத்திய துணைத்தலைவர் மீது பாய்ந்தது என பல்வேறு விரும்பத்தகாத செயல்களையும்  நாடாளுமன்றத்திலேயே அரங்கேற்றினர். 

விவசாயிகளுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கக்கூடிய இந்த மசோதாவைக் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றக்கூடாது என்றும், வாக்குச் சீட்டு அடிப்படையிலேயே தேர்வு செய்ய வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தின. அதே நேரத்தில், இந்த மசோதா தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டு முழுமையான ஆய்வு செய்த பிறகே அமல்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உட்பட பெரும்பாலான கட்சிகளின் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரித்த மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ், வேளாண் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக திடீரென்று அறிவித்தார்.

இதன் காரணமாக, எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் கடும் அமளி துமளியில் ஈடுபட்டனர். அப்போது, இந்த காட்சிகள் அனைத்தும் நாடு முழுவதும் ராஜ்யசபா டிவி மூலம் நேரடி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. இதனால், அதிரடியாக அந்த நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அவையில் அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் 8 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இந்த கூட்டத் தொடர் முடியும் வரை அவர்கள் பங்கேற்கத் தடையும் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, நாடாளுமன்றத்தில் நேற்றும் இந்த பிரச்சனை பெரிய விவாத பொருளாக மாறியது.

மேலும், வேளாண் மசோதாக்களில் நிறைவேற்றப்பட்டது குறித்து, பல்வேறு கட்சியின் உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர். அப்போது, “விவசாயிகள் தற்கொலை தொடர்பான தகவல்களைத் தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரங்களில் இடம் பெறாதது ஏன்?” என்று, மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்குப் பதில் அளித்துப் பேசிய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, “விவசாயிகள் தற்கொலை தொடர்பாக எவ்வித தரவுகளையும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திடம் வழங்கவில்லை” என்று, தெரிவித்தார்.

அத்துடன், “மற்ற துறைகளில் பணியாற்றுவோரின் தற்கொலைகள் குறித்த தகவல்களை வழங்கும் மாநில அரசுகள், விவசாயிகளின், விவசாய தொழிலாளர்களின் தற்கொலை தொடர்பான விவரங்களை வழங்குவதில்லை” என்றும், அமைச்சர் கிஷண் ரெட்டி வெளிப்படையாகவே கூறினார்.

“இதன் காரணமாகவே தேசிய அளவில் விவசாயிகள் தற்கொலை தொடர்பான தரவுகள் தனியாக வெளியிடப்படவில்லை” என்றும், அமைச்சர் கிஷண் ரெட்டி விளக்கம் அளித்தார்.

ஆனால், அதே நேரத்தில் “சென்னை உயர்நீதிமன்றத்தில் 5.70 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும், தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் சுமார் 11.57 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன” என்றும், மத்திய சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“கடந்த 3 ஆண்டுகளில் கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியின் போது தூய்மை பணியாளர்கள் 288 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், விவசாயிகள் தற்கொலை தொடர்பான தரவுகள் இல்லை. இது தொடர்பான இணைய வாசிகள் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

“விவசாயிகள் தற்கொலை தொடர்பாகத் தரவுகள் இல்லை” கை விரித்த மத்திய அரசு என்று குறிப்பிட்டு, “இது அரசாங்கமா.. மன்னாரன் கம்பெனியா?” என்றும், பொறுப்பு உணர்ந்து பதில் அளியுங்கள் என்றும், நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். 

எனினும், “வேளாண் மசோதாக்களில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த நேரத்தில், தேசிய அளவில் விவசாயிகள் தற்கொலை தொடர்பான தரவுகளை வெளியிட்டால், அது மத்திய அரசுக்கு இன்னும் பெரிய சிக்கலை ஏற்படுத்தும்” என்றும், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. “அதன் காரணமாக, மத்திய அரசு அந்தர தரவுகளை வெளியிட மறுப்பதாகவும்” எதிர்க்கட்சிகள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனிடையே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக வரும் 24 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.