தளபதி விஜயின் நிழலாக விளங்குபவர் ஜகதீஷ். சினிமா காதலால், சினிமாவையே முழுநேர தொழிலாக கொண்டவர்களுள் ஜகதீஷும் ஒருவர். செலிபிரிட்டி மேனேஜராக திரை வட்டாரத்தில் கால் பதித்து, இன்று தயாரிப்பாளராக உயர்ந்து தலை நிமிர்ந்து நிற்கிறார் ஜக்தீஷ். XB ஃபிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் லைன் ப்ரொடுயூசராக பணியாற்றியுள்ளார். தளபதியின் வெற்றிகரமான திரைப்பயணத்தில் ரசிகர்களுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அதே அளவிற்கு ஜகதீஷிற்கும் பங்குள்ளது.

இந்நிலையில் ஜகதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது சகோதரரான நடிகர் கதிருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்த ஜகதீஷ், தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று குறிப்பிட்டு, சகோதரருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் இன்றைய இளம் நடிகர்களில் குறுகிய காலத்தில் பல தரமான படங்களில் நடிப்பவராக மாறுபட்ட கதையம்சம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவராக திகழும் நடிகர் கதிர் இன்று (செப்டம்பர் 21) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

முதல் படமான மதயானைக் கூட்டம் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் கதிர். மதுரை வட்டாரத்தில் குறிப்பிட்ட ஆதிக்க சாதியினரின் சாதி உணர்வு சார்ந்த வன்முறை அவர்களை எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பதை மேம்பட்ட திரைமொழியுடனும் அந்தக் கதைக்குத் தேவையான பதைபதைப்புடனும் சொன்ன அந்தப் படம் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. சிறு நகரத்தைச் சேர்ந்த இளைஞராக மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருந்தார் கதிர். 

அடுத்ததாகத் தேசிய விருதுபெற்ற காக்கா முட்டை படத்தின் மூலம் அறிமுகமான மணிகண்டன் கதை வசனம் எழுதி அணுசரண் இயக்கிய கிருமி திரைப்படத்தில் நாயகனாக நடித்தார் கதிர். போலீஸ் இன்ஃபார்மர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய மாறுபட்ட கதையம்சமுள்ள படம் அது. ,காவல்துறையினருடன் நெருங்கிப் பழகுவதில் இருக்கும் ஆபத்துகளைப் பிரச்சார நெடியின்றி எளிமையாகவும் உயிரோட்டமாகவும் சொன்ன 'கிருமி' விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. கதிரின் பக்கத்து வீட்டுப் பையன் போன்ற தோற்றமும் யதார்த்தமான நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டன.

பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018 செப்டம்பர் 28 அன்று வெளியான பரியேறும் பெருமாள் கதிரின் திரைவாழ்வில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமங்களிலும் சட்டக் கல்லூரியிலும் நிலவும் சாதிய ஏற்ற தாழ்வுகளைத் தோலுரித்த அந்தப் படத்தில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞனும், சட்டக் கல்லூரி மாணவனுமான பரியனாக அனைவரையும் வியக்க வைக்கும் நடிப்பைத் தந்திருந்தார் கதிர்.

அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படத்தில் தளபதி விஜய்யின் நண்பராக மற்றுமொரு முக்கிய துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார். கடந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படம் அது தொடர்ந்து ஜடா, சத்ரு போன்ற படங்களில் நாயகனாக நடித்தார். சிகை என்னும் படத்தில் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது சர்பத் உள்ளிட்ட படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். கதிரின் பிறந்தநாளான இன்று அவரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.