கடந்த 2002-ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மதுமிதா. அதன் பிறகு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான குடைக்குள் மழை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் 2004-ம் ஆண்டு வெளிவந்தது. இதையடுத்து சத்யராஜின் இங்கிலீஷ்காரன், ஆணிவேர், நாளை, அறை எண் 305-ல் கடவுள், அமீரின் யோகி, தூங்கா நகரம் உள்பட பல படங்களில் நடித்தார். இவர், தெலுங்கு நடிகர் சிவ பாலாஜியை காதலித்து வந்தார். சிவ பாலாஜி தமிழில், இங்கிலீஷ்காரன் படத்தில் மதுமிதாவுடன் இணைந்து நடித்திருந்தார்.

இருவரும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகும் படங்களில் நடித்து வருகிறார். இவர்களுக்கு தன்வின் கங்குலா, ககன் கங்குலா என்ற மகன்கள் உள்ளனர். இவர்கள் ஐதராபாத் அருகில் உள்ள மணிகொன்டாவில் தனியார் பள்ளி ஒன்றில் 6 மற்றும் முதல் வகுப்பு படித்து வருகின்றனர்.

நடிகை மதுமிதாவும் அவர் கணவர் சிவபாலாஜியும் ஊரடங்கு காரணமாகக் கட்டணத்தை குறைக்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் கூறியுள்ளனர். இதன் காரணமாக அவருடைய மகன்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து பள்ளி நிர்வாகம் நீக்கி உள்ளது. இதுபற்றி மதுமிதா பேசுகையில், லாக்டவுன் காரணமாக பெற்றோர்களால் கட்டணம் செலுத்த முடியவில்லை. என் மகன்கள் படிக்கும் பள்ளி நிர்வாகத்திடம் கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று 240 பெற்றோர் கையெழுத்திட்டு கடிதம் கொடுத்தோம். 

எங்களுக்கு கட்டணம் செலுத்துவது பிரச்னை இல்லை என்றாலும் அவர்களுக்காக குரல் கொடுத்தோம். பள்ளி நிர்வாகத்துக்கு மெயில் அனுப்பினோம். இதனால் பள்ளி நிர்வாகம் எந்த காரணமும் சொல்லாமல், ஆன்லைன் வகுப்பில் இருந்து என் மகன்களை நீக்கி இருக்கிறது. என்ன காரணத்துக்காக நீக்கியுள்ளீர்கள் என்று மெயில் அனுப்பியதற்கும் பதில் இல்லை. 

அதனால் இதை மனித உரிமை ஆணையத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். இவ்வாறு தெரிவித்துள்ளார். மதுமிதாவின் கணவர் சிவபாலாஜி கூறும்போது, நானும் மதுமிதாவும் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்து பெற்றோர்களிடம் பேசிவருவதாகக் கருதுகிறது. அது தவறு. அப்படி ஏதும் நாங்கள் செய்யவில்லை. பள்ளி நிர்வாகம் கூடுதல் கட்டணம் செலுத்தச் சொல்லி எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது என்றார்.

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனில் பல குழந்தைகள் வீட்டிலே ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வி பெறுகின்றனர். பலர் தங்கள் தொழிலை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில் கல்வி கட்டணத்தொகை குறைவாக இருந்தால் மட்டுமே மாணவர்கள் பயனடைய முடியும் என கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். 

மதுமிதா கைவசம் கர்ஜனை திரைப்படம் உள்ளது. த்ரிஷா லீட் ரோலில் நடித்த இந்த படத்தை சுந்தர் பாலு இயக்கியுள்ளார். அம்ரீஷ் கணேஷ் இசையமைதுள்ளார். வம்சி கிருஷ்ணா மற்றும் அமித் பார்கவ் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இது தவிர்த்து புத்தன் இயேசு காந்தி என்ற படத்தில் நடித்துள்ளார். வெற்றிவேல் சந்திரசேகர் இந்த படத்தை இயக்கியுள்ளார். கிஷோர் முக்கிய ரோலில் நடிக்கும் இந்த படத்திற்கு வேத் ஷங்கர் இசையமைக்கிறார்.