இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்குகிறது.

தமிழகம் உட்பட உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் விதமாக, சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 

இந்த ஆண்டிற்கான இந்தக் கூட்டத்தொடரானது, தமிழக ஆளுநர் உரையுடன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்குகிறது. இது குறித்து சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன், கடந்த 21 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தக் கூட்டத் தொடர் பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 11 மணிக்குச் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கத்தில் உள்ள பல்வகைக் கூட்டரங்கில் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது” என்று, குறிப்பிடப்பட்டு உள்ளது. 

“முதலில் ஆளுநர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்த உள்ள நிலையில், அவரைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசிப்பார்” என்றும், அதில் குறிப்பிட்டு உள்ளது. 

மேலும், தமிழ்நாடு சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் உரையில் பல்வேறு கவர்ச்சிகரமான புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன், “ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையில் துறை ரீதியான திட்டங்களின் நிலை, அரசின் திட்டங்கள் அறிவிப்பாக வெளியாகும்” என்றும், எதிர்பார்க்கப்படுகிறது.

அது போல், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான அறிவிப்பு வெளியாகும்” என்றும், இன்றைய கூட்டத்தொடரில் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், தமிழகத்தில் தற்போது நிலவும் கொரோனா விவகாரம், வேளாண்மைச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப முக்கிய எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

முக்கியமாக, ஆளுநர் உரைக்குப் பிறகு, சட்டப் பேரவை சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடத்தி, கூட்டத் தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும், ஆளுநர் உரை மீதான விவாதம் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பது குறித்தும், இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது.

இன்று தொடங்கும் இந்த கூட்டத் தொடரானது 3 அல்லது 4 நாள்கள் நடைபெறும் என்றும், சட்டப் பேரவைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. மத்திய நிதிநிலை அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், மாநில அரசின் நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இதனிடையே, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.