தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்றவர் இயக்குநர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் இயக்குநர் ஷங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகின. இதனை மறுத்துள்ள இயக்குநர் ஷங்கர். இது தொடர்பாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: எழும்பூர் நீதிமன்றம் எனக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். எனது வழக்கறிஞர் சாய் குமார் இன்று நீதிமன்றத்தை அணுகி இந்தச் செய்தியை அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். எனக்கெதிராக எந்த வாரண்ட்டும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக நீதிபதி உறுதி செய்தார்.

இணையத்தில் தினசரி நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுவதில் நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.

சரி பார்க்கப்படாமல் இப்படி ஒரு பொய்யான செய்தி உலவுவதைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த விஷயம் எனது குடும்பத்துக்கும், நல விரும்பிகளுக்கும் தேவையில்லாத மன உளைச்சலைத் தந்துள்ளது. இது போன்ற பொய்யான செய்திகள் இனி பரவாது என்பதை உறுதி செய்ய, இந்த அறிக்கையை வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஷங்கர் தற்போது இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இதன் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. அதற்குள் பிக்பாஸ் சீசன் 4 மற்றும் அரசியல் களம் என பிஸியாகி விட்டார் கமல். கடந்த 1996-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் இந்தியன். தற்போது இதன் இரண்டாம் பாகத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. 

விவேக், டெல்லி கணேஷ், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் போன்ற நட்சத்திரங்கள் இதில் உள்ளனர். கடந்த ஆண்டு இந்தியன்-2 படப்பிடிப்பின் போது க்ரேன் அழுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரும் அறிந்ததே.