தமிழ்நாடு உட்பட இந்தியா முழுதுவும் தீபாவளி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொது மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்தும், இனிப்புகள் வழங்கியும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை கூறி தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அத்துடன், சிறுவர்கள் சிறுமியர்கள் பெரும்பாலோர் வீட்டின் முன்பு பட்டாசுகளை வெடித்தும் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். 

இது தொடர்பாக, பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள். இந்த தீபத்திருநாள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, நல்ல அதிர்ஷ்டத்தை தர வேண்டும் என்று வாழ்த்துக்றேன். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

இதனிடையே, பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்து உள்ளார்.

அதன் படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை, அவர் காஷ்மீரில் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் கொண்டாடுகிறார். 

அது போல், நாட்டு மக்கள் அனைவருக்கும் ராகுல் காந்தி தீபாவளி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “தீப ஒளி பாகுபாடின்றி அனைவரையும் ஒளிரச் செய்கிறது. இதுவே தீபாவளிச் செய்தி. உங்கள் அன்புக்குரியவர்களுடன் தீபாவளியை கொண்டாடுங்கள். அனைவரின் இதயங்களையும் இணைப்பவராக இருங்கள். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!” என்று கூறியுள்ளார். 

இதனிடையே, தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.