மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனான நடிகர் துல்கர் சல்மான் மலையாள திரை உலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். தொடர்ந்து மலையாளத்தில் மட்டுமல்லாது இந்திய திரை உலகிலும் தற்போது பல்வேறு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

முன்னதாக தமிழில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் முதல் திரைப்படமான ஹே சினாமிகா திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வாலுடன் இணைந்து துல்கர் சல்மான் நடிக்கிறார்.

மேலும் மலையாளத்தில் சல்யூட், தெலுங்கில் யுத்தம் தோ ராசினா பிரேம கதா மற்றும் ஹிந்தியில் இயக்குனர் பால்கி இயக்கத்தில் சுப்-ரிவஞ் ஆஃப் தி ஆர்டிஸ்ட் புதிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ள நிலையில் வருகிற நவம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது துல்கர் சல்மானின் குருப் திரைப்படம்.

 உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் குருப் திரைப்படத்தை ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார்.மேலும் துல்கருடன் இணைந்து டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், சன்னி வெய்ன், ஷைன் டாம் சாக்கோ, ஷபீடா துள்ளிபலா, சுரபி லக்ஷ்மி மற்றும் பரத் சீனிவாசன் ஆகியோர் நடித்துள்ளனர். 

நிமிஷ் ரவி ஒளிப்பதிவில் சுசின் ஷ்யாம் இசையமைத்துள்ள குருப் திரைப்படத்தை வேஃபெரர் பிலிம்ஸ் சார்பில் நடிகர் துல்கர் சல்மான் தயாரித்துள்ளார். இந்நிலையில் துல்கர் சல்மானின் குருப் திரைப்படத்தின் விறுவிறுப்பான ட்ரெய்லர் சற்று முன்பு வெளியானது. ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.