வருங்கால மனைவி பிரிந்து சென்றதால் அதிரடி திருப்பமாக, மணமகன் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

பிரேசில் நாட்டில் தான், இப்படி ஒரு வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த டியோகோ ரபேலோ என்பவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

அதே போல், அதே நாட்டைச் சேர்ந்த விட்டர் பியூனோ என்ற இளம் பெண்ணும், டியோகோ ரபேலோவும் கடந்த சில வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். தங்களது காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைத்த அந்த காதல் ஜோடி, திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி, காதலர்கள் டியோகோ ரபேலோ - விட்டர் பியூனோ இருவருக்கும், அவர்களது பெற்றோர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். அத்துடன், இந்த ஜோடி இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் திருமண தேதி குறிக்கப்பட்டு, ஒரு ஆடம்பரமான திருமணத்தை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால், அதற்குள் யார் கண் பட்டதோ தெரிய வில்லை. அந்த காதல் ஜோடிக்குளுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்து உள்ளது. இதன் காரணமாக, திருமணத்திற்கு முன்பே அந்தப் பெண், தனது காதலனை பிரேக் அப் செய்து விட்டு, காதலனை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். 

இதையடுத்து, நடைபெற இருந்த திருமண ஏற்பாடுகளை உடனடியாக நிறுத்தலாம் என்று, காதலனின் குடும்பத்தினர் கூறி உள்ளனர். ஆனால், அதற்கு  மணமகன் டியோகா அதிரடியாக மறுப்பு தெரிவித்து உள்ளார். மணமகளே இல்லை என்றாலும் கூட, எனது திருமணம் சிறப்பாக நடைபெற வேண்டும் என அவர் கடைசி வரை உறுதியாக இருந்து உள்ளார்.

இதன் காரணமாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் குறித்த தேதியில், தன்னைத் தானே திருமணம் செய்ததுடன் இதனை டியாகோ ராபெலோ தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். உறவினர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

இது தொடர்பாக மணமகன் டியாகோ ராபெலோ, தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “என்னுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களில் இதுவும் ஒன்று” என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், “எனக்கு மிகவும் பிடித்த நபர்களுடன் நேரத்தைச் செலவழித்தேன். மிகவும் சோகமான இந்த நாளை நான் நகைச்சுவையாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றி உள்ளேன். என்னை நானே அதிகம் காதலிப்பது அவசியம் என்பதைப் புரிந்து கொண்டு இருக்கிறேன்” என்று, அவர் பதிவிட்டு உள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட மணமகனுக்குப் பலரும் தற்போது தன்னம்பிக்கையுடன் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே, வருங்கால மனைவி பிரிந்து சென்றதால் அதிரடி திருப்பமாக, மணமகன் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்களைப் பலரும் தற்போது பகிர்ந்து வருகின்றனர்.