பிரேசில் நாட்டில் 12 சென்டி மீட்டர் நீளமுள்ள வாலுடன் குழந்தை ஒன்று பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக பரிணாம வளர்ச்சிக் கொள்கையின்படி, குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று கூறுவோம். அவ்வாறு பிறந்த மனிதனின் மூதாதையர்களுக்கு வால் இருந்ததாகவும், அறிவியல் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. பின்னர் நாகரீக வளர்ச்சி காரணமாக, 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடக்க துவங்கிய மனிதன், தன் உடம்புடன் வளர்ந்த வாலை மனிதன் இழந்ததாகவும் அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மேலும், தற்காலத்தில் வீட்டில் பெரியவர்களின் பேச்சை எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்காமல், இயல்பிலேயே சில குழந்தைகள் குறும்புத்தனம் அதிகளவில் செய்வதுண்டு. அவ்வாறு குறும்புத் தனம் செய்யும் குழந்தைகளை சேட்டைக்காரன் என்றும், அறுந்த வாலு என்றும் நம் பெரியவர்கள் கூறுவார்கள்.

இதனை உறுதி செய்யும் வகையில் அவ்வப்போது சில குழந்தைகள் அபூர்வமாக நிஜ வாலுடன் பிறக்கும் அதிசயமும் உலகில் நடக்கும். அந்தவகையில், ஒரு சம்பவம் பிரேசிலில் நிகழ்ந்துள்ளது. பிரேசிலின், ஃபோர்டலீசா நகரில் சபீன் குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது.

இந்த மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு, ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனால் குழந்தையின் தாய் மகிழ்ச்சி அடைந்த நிலையில்,  குழந்தையின் பின்பகுதியில், வால் ஒன்று இருந்துள்ளது. அதனுடன், வாலின் முடிவிலும், பந்து போன்ற அமைப்பு இருந்ததைக் கண்டு அந்த குழந்தையின் தாய் அதிர்ச்சி அடைந்தார்.

குழந்தை பிறந்தபோது, வால் 12 சென்டிமீட்டர் நீளம் இருந்ததாகவும், வாலின் நுனியில் 4 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட பந்து போன்று இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட மாதத்திற்கு முன்னதாக 35 வாரங்களிலேயே குழந்தை பிறந்துள்ளது. அதிலும் அந்த ஆண் குழந்தை எந்த சிக்கலும் இன்றி பிறந்துள்ளது. 

பின்னர், குழந்தையின் வாலை அகற்றுவதற்காக, மருத்துவர்கள் அந்த ஆண் குழந்தைக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்தனர். அப்போது, குழந்தையின் வால், குழந்தையின் நரம்பு மண்டலத்துடன் இணையாமல் இருந்ததால், குழந்தையின் வாலை அகற்றுவதில் சிக்கல் இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து, அந்த ஆண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் பெற்றோர்களின் சம்மதத்துடன் அந்த வால் மருத்துவர்களால் அகற்றப்பட்டு மகிழ்ச்சியை அளித்து இருக்கிறது.

ஆனால் எவ்வாறு ஆண் குழந்தையின் வால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது என்று மருத்துவர்கள் கூறவில்லை. இந்த வால் அகற்றும் அறுவை சிகிச்சை குறித்து, ‘ஜர்னல் ஆஃப் பீடியாட்ரிக் கேஸ்’ அறிக்கையில் குறிப்பிட்டாலும், ஆண் குழந்தை தற்போது முழுமையாக எப்படி உள்ளது என்ற தகவலை வெளியிடவில்லை. இந்த சம்பவம் பிரேசில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த சம்பவம் பிரேசில் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதேபோல், இந்தியாவில் அர்ஷித் அலி கான் என்ற ஒரு குழந்தை வாலுடன் பிறந்தது. 14 வயதாகும் வரை அந்த சிறுவன் வாலுடனேயே இருந்துள்ளான். அந்த சிறுவனை அனுமானின் மறுபிறவி என்று கூறி, அவனை மக்கள் வணங்கி வந்தார். பின்னர் அந்த சிறுவனுக்கு விருப்பம் இல்லாததாலும், தொந்தரவாக இருந்ததாலும் மருத்துவர்கள் அந்த வாலை அகற்றிவிட்டார்கள்.

குழந்தைகள் பிறக்கும் பொழுதே வாலுடன் இருப்பது அரிதாக சில முறை ஏதாவது ஒரு பகுதியில் நிகழத்தான் செய்கிறது. அதற்கான மருத்துவ விளக்கத்தை மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். ‘கர்ப்பத்தின் ஆறாவது வாரத்தில், மனித கருவானது (கருமுட்டை) பல முதுகெலும்புகள் நிறைந்த ஒரு வாலினை பெற்றிருக்கிறது. இருப்பினும், அடுத்த இரண்டு வாரங்களில் முதுகெலும்புகள் உருவாகுவதால், வால் மறைந்து வால் எலும்பு உருவாகிறது. 

அரிதான சந்தர்ப்பங்களில், மனிதக் குழந்தைகள் ஒரு வெஸ்டிஷியல் வால் உடன் பிறக்கின்றனர். எனினும், அத்தகைய வால்கள் முதுகெலும்பு இல்லாதவை மற்றும் பாதிப்புகள் இல்லாதவை. இதுபோன்ற சில நிகழ்வுகள் ஸ்பைனா பிஃபிசா உடன் தொடர்புடையவை. உதாரணமாக, அதாவது தண்டுவடம் முழுவதுமாக இணைக்கத் தவறியதால் நிகழ்கிறது. எனினும், குழந்தையின் உடலில் இருந்து வாலினை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றுவதில் சிக்கல் இல்லை’ என்று தெரிவித்துள்ளனர்.