தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விக்ரம் பிரபு இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த கும்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, இது என்ன மாயம், வானம் கொட்டட்டும், அசுரகுரு என பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட படைப்பாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பார்த்திபேந்திர பல்லவன் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் பிரபு இயக்குனர் கார்த்திக் சௌத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதனிடையே இயக்குனர் வெற்றிமாறனின் அசுரன், சூர்யாவின் ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகரான தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் டாணாக்காரன். பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்க லால், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ள டாணாக்காரன் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் டாணாக்காரன் திரைப்படம் விரைவில் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.