தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ரத்னகுமார் நடிகர் வைபவ் கதாநாயகனாக நடித்த மேயாதமான் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். எதார்த்தமான என்டர்ட்டெய்னிங் திரைப்படமாக வெளிவந்த மேயாத மான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து நடிகை அமலாபால் கதாநாயகியாக நடித்த ஆடை படத்தை இயக்கினார் ரத்னகுமார்.பலரது கவனத்தையும் ஈர்த்த ஆடை திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றதை தொடர்ந்து தமிழ் திரை உலகில் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக இயக்குனர் ரத்ன குமார் உயர்ந்துள்ளார்.
 
தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி விஜய் கதாநாயகனாக நடித்த மாஸ்டர் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் ரத்னகுமார் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். முன்னதாக நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான A1 படத்தின் தயாரிப்பு நிறுவனமான சர்க்கிள் பாக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டரை நாளை (மார்ச் 16 ஆம் தேதி) இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்பராஜ், வெங்கட்பிரபு, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் ஆகியோர் வெளியிடவுள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.