தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருகிறார். முன்னதாக விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

காவல் துறை அதிகாரியாக விஜய் ஆண்டனி நடித்துள்ள காக்கி, மூடர்கூடம் பட இயக்குனர் நவீன் இயக்கத்தில் அக்னிசிறகுகள் மற்றும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் தமிழரசன் திரைப்படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக தயாராகிவரும் கொலை மற்றும் தமிழ் படம் பட இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் ரத்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

தொடர்ந்து இயக்குனராகவும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கவுள்ள விஜய் ஆண்டனி  நடிப்பில் அடுத்த ரிலீசுக்கு தயாராகி வரும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். முன்னணி ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான S.D.விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து மழை பிடிக்காத மனிதன் படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். 

மேலும் சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், முரளி சர்மா, தனஞ்ஜெயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்ஃபினிட்டி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ள மழை பிடிக்காத மனிதன் படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்க பிரவீன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

சமீபத்தில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில் தற்போது மழை பிடிக்காத மனிதன் படத்தின் இறுதிகட்ட பணிகள் தொடங்கியுள்ளன. அந்த வகையில் மழை பிடிக்காத மனிதன் படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.