மத்தியப் பிரதேச பாஜக தலைவர் உமா பாரதி, “அம்மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி” நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டபோது, திடீரென்று ஒரு மதுபான கடைக்குள் நுழைந்து கல் வீசி மதுபாட்டில்களை உடைத்து தாக்குதல் நடத்திய சம்பவம்” இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி அவ்வப்போது போராட்டங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்று தான். ஆனால், இதற்கு இன்னும் தீர்வானது எட்டப்படாமல் அப்படியே இருக்கிறது.

இந்த சூழலில் தான், தற்போது உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தலில் பாஜக கட்சியானது, 4 மாநிலத்தில் வெற்றிப் பெற்ற உற்சாகத்துடன், காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் தற்போது பாஜக தான் ஆட்சி செய்து வருகிறது.

அந்த மாநிலத்தில், முதலமைச்சர், மக்களவை உறுப்பினர், மத்திய அமைச்சர், பாஜக துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர் உமாபாரதி. ஆனால், அவர் தற்போது அந்த மாநிலத்தில் எந்த பதவியிலும் இல்லை. 

எனினும், உமாபாரதி பாஜகவின் மூத்த தலைவர்களில் மிக முக்கியமானவராக தற்போதும் இருந்து வருகிறார். அவர் தொடர்ந்து கட்சி சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். 

இந்த நிலையில் தான், தனது சொந்த மாநிலமான “மத்தியப் பிரதேசத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்” என்று, உமாபாராதி அண்மைக்காலமாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறார்.

இதற்காக அந்த மாநிலத்தில் அவர் பல போராட்டங்களையும், பேரணிகளையும் அவர் முன்னெடுத்து வந்திருக்கிறார். 

இந்த சூழலில் தான், “வரும் 15 ஆம் தேதிக்குள் மத்தியப் பிரதேசத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்” என்று உமாபாராதி, கெடு விதித்திருநடதார்.

ஆனால், அவரது கோரிக்கைக்கு அந்த மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசானது செவிசாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

அத்துடன், அந்த மாநில அரசு சார்பில் அந்த மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், “வெளிநாட்டு மதுபானங்களுக்கான வரியையும் கணிசமாக” குறைத்து உத்திரவிட்டிருந்தார்.

அந்த மாநில பாஜக அரசின் இந்த நடவடிக்கையால் கடும் ஆத்திரமடைந்த பாஜக மூத்த தலைவர் உமாபாரதி, அந்த மாநிலம் போபாலில் உள்ள ஒரு மதுக்கடைக்கு தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

குறிப்பாக, இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக அங்கிருந்த ஒரு மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினார். உமாபாரதி ஒரு கல்லை எடுத்து அந்த மதுகடையில் வீசிய அடுத்த கனமே, அவரது ஆதரவாளர்களும் அடுத்தடுத்து அந்த மதுகடைக்குள் கற்கலை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனால், அந்த பகுதியே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த உமாபாரதி, “நாளை முதல் மதுவுக்கு எதிரான எனது போராட்டத்தை தொடங்க உள்ளேன்” என்று, சூளுரைத்தார். 

இதனிடையே, போபாலில் உள்ள மதுபான கடை ஒன்றுக்குள் சென்ற உமாபாரதி அந்த கடைக்குள் கல்லை வீசி மதுபாட்டில்களை உடைத்த சம்பவமானது, தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. 

எனினும், மதுகடையை உடைத்து சேதப்படுத்திய உமாபாரதி மீது அந்த மாநில போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்ய வில்லை என்றும், அவரை கைது செய்யவில்லை என்கிற தகவலும் வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.