5 மாநில தேர்தல்களில் காங்கிரஸின் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து அக்கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தியை பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தை தவிர மற்ற 4 மாநிலத்திலும் பாஜக அபார வெற்றிப் பெற்று ஆட்சியை அமைத்தது. அதே நேரத்தில், பஞ்சாப்பில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி, ஆட்சியை இழந்தது. இதனால், அங்கு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை முதன் முதலாக பிடித்து உள்ளது. 

இதனால், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை அடைந்தது. ஆனால், பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி, தங்களது ஆட்சியைத் தக்க வைக்க கடுமையாக போரடிய நிலையில், அது முற்றிலுமாக பலன் அளிக்கவில்லை. அதே போல், கோவாவிலும் காங்கிரஸ் கட்சி இழுபறியாக இருந்த நிலையில், பாஜகவே அங்கு வெற்றிப் பெற்றது. இப்படியாக, நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியை பறைசாற்றும் விதமாக அமைந்திருந்தது.

இந்த நிலையில் தான், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று காலை அக்கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ஆனந்த் சர்மா, கே சுரேஷ், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு, பல விசயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாகவே, “5 மாநில தேர்தல்களில் காங்கிரஸின் தோல்விக்கு என்ன காரணம்?” என்பது குறித்து ஆலோசிக்க அக்கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் தற்போது கூடி உள்ளது.

இந்த கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் சோனியா தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அம்பிகா சோனி உள்ளிட்ட 56 பேர் கலந்து கொண்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்த கூட்டத்தில், பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. 

இதில் முக்கியமாக சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் கட்சி அடைந்து உள்ள மோசமான தோல்வி குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.

முக்கியமாக, “காங்கிரஸ் கட்சியை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும் என்றும், அக்கட்சிக்கு முழு நேரம் செயல்படும் வகையில் தலைவர் வேண்டும் என்றும் அதிருப்தி தலைவர்கள் வலியுறுத்தி” வருகின்றனர். 

இதனால், செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த காங்கிரஸ் உட்கட்சி தேர்தல், இந்த 5 மாநில தேர்தல் முடிவுகளால் முன் கூட்டியே நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

குறிப்பாக, “ராகுல் காந்தியே மீண்டும் தலைவர் பதவிக்கு வர வேண்டும்” என்றும், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால், “ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்க கோரிக்கை விடுக்கப்படுவதால், காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் இது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.