தனது பிள்ளைகளுக்கு காதணி விழா நடத்த முடிவு செய்த தாய் ஒருவர், “தாய்மாமனை மிஞ்சிய உறவேது?” என்பதை நிரூபிக்கும் வகையில், உயிரிழந்த தனது தம்பிக்கு சிலை செய்து, அந்த சிலையின் மடியில் வைத்து தனது பிள்ளைகளுக்கு காதணி விழா நடத்திய நிகழ்வானது, அந்த ஊர் மக்கள் அனைவரையும் ஆனந்த கண்ணீரில் அழும் படி செய்து உள்ளது, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டிற்கு என்று ஒரு தனி கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்ற ஒன்று இருக்கிறது. இந்த பண்பாட்டு கலாச்சார உறவுமுறைகளை சிலர் பின்பற்றாமல் பிற்போக்குத் தனமாக இருந்தாலும், பெரும்பாலனவர்கள் இவற்றை எல்லாம் இன்றளவும் பின் பற்றித் தான் வருகிறார்கள்.

அந்த வகையில், நெஞ்சை ஏதோ ஒரு வகையில் வருடிச் செல்லும் இந்த உன்னத நிகழ்வானது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தான் நடந்திருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்த சௌந்தர பாண்டி - பசுங்கிளி தம்பதியினரின் மகனான பாண்டித்துரை என்ற இளைஞர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்பாரத விபத்து ஒன்றில் திடீரென்று உயிரிழந்தார்.

ஆனால், அவர் உயிரிழக்கும் முன்பே, பாண்டித்துரையின் மூத்த சகோதரி பிரியதர்ஷினிக்கு திருமணம் ஆயிருந்த நிலையில், அவரது மகள் தாரிகா ஸ்ரீ மற்றும் மகன் மோனேஷ் குமரன் ஆகியோரது காதணி விழா பற்றி,  உயிரிழக்கும் முன்பு பாண்டித்துரை எப்போதும் பேசிக்கொண்டே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் தான், தனது வீட்டில் குடும்ப விழா நடத்த முடிவு செய்திருந்த உயிரிழந்த பாண்டித்துறையின் மூத்த சகோதரி பிரியதர்ஷினி, தனது பிள்ளைகளுக்கு காதணி விழா நடத்த முடிவு செய்தார்.

ஆனால், எப்போதும் தனது குழந்தைகள் பற்றியே பேசிக்கொண்டிருந்த தம்பி பாண்டித்துறை, தற்போது உயிருடன் இல்லாதது அவருக்கு பெரும் கவலையாக இருந்தது.

அத்துடன், “தாய்மாமனை மிஞ்சிய உறவேது?” என்பதை நிரூபிக்கும் வகையில், தனது தம்பி பாண்டித்துரை உயிரிழந்திருந்தாலும், அவருடைய மெழுகு உருவச் சிலையை செய்து, தாய்மாமன் செய்முறைகள் செய்யப்பட்டு அவரது சிலையின் மடியில் குழந்தைகளை அமர வைத்து காது குத்த திட்டமிட்டு, அந்த சிலையை செய்ய ஆர்டரும் கொடுத்தார்.

அதன்படி தம்பியின் மெழுகு சிலை சுமார் 5 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்ட நிலையில், அந்த சிலைக்கு ஆடை ஆபரணங்கள் போடப்பட்டு அலங்கரிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, அலங்கரிக்கப்பட்ட இந்த தாய்மாமன் மெழுகு சிலையை, குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் அமர வைக்கப்பட்டு ஊர்வலமாக திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், “திருமண மண்டபத்தில் அக்காள் குழந்தைகளுக்கு தன்னுடைய மடியில் வைத்து காதணி விழா நடைபெற வேண்டும்” என்ற, பாண்டித் துரையின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் வகையில், தம்பியின் மெழுகு சிலையின் மடியில் பிள்ளைகள் இருவரையும் அமர வைத்து அவர்களுக்கு காதணி விழாவை நடத்தி முடித்திருக்கிறார் பாசமிகு  அக்காவான பிரியதர்ஷினி.

இப்படி, சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு தாய்மாமன் பாசத்தை, குழந்தைகளுக்கு தெரிவிக்கும் வகையில், அக்கா ஒருவர் உயிரிழந்த தனது தம்பியை சிலையாக வடித்து குடும்ப விழா நடத்தியிருந்தது, அந்த விழாவிற்கு வருகை தந்திருந்த ஒட்டுமொத்த பேரையும் ஆனந்தமாக கண் கலங்க செய்தது. இதனால், தம்பியின் பாசத்தால் துடித்த அக்கா பிரியதர்ஷினி மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமில்லாமல், அந்த ஊர் மக்களே இந்த பாசத்தை கண்டு ஆனந்த கண்ணீரில் நனைந்து போனார்கள்.

உயிர் இழந்த பாண்டித் துரையின் சிலையுடன் நடைபெற்ற இந்த குடும்ப விழாவனாது, தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.