“சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின் வெற்றிகள், மக்கள் திமுக மீது வைத்த நம்பிக்கையை காட்டுகிறது” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்து உள்ளார்.

அதாவது, திமுக நகர நிர்வாகி இல்ல விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலையில் கலந்து கொண்டார்.

அந்த திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “திமுக மீது மக்கள் வைத்த நம்பிக்கையே நடைபெற்று முடிந்த சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு காரணம்” என்று குறிப்பிட்டார். 

அத்துடன், “தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும், மக்கள் திமுக மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது” என்றும், கூறினார். 
மேலும், “எதிர்கட்சியோ, ஆளுங்கட்சியோ நாங்கள் மக்களுக்காக பணி ஆற்றி வருகிறோம் என்றும், எதிர்க்கட்சியாக இருந்த போதே மக்களுக்காக செயல்பட்ட இயக்கம் திமுக தான்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

முக்கியமாக, “உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களுடைய கடமையை மனதில் வைத்துக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்றும், உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதத்திற்கு 99 சதவீதத்திற்கு மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளோம்” என்றும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மிக முக்கியமாக, “பொய் பிரச்சாரங்களை முறியடித்து திமுக மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சூளுரைத்தார். 

குறிப்பாக, “கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம் தான்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

அதாவது, தமிழகத்தில் கொரோனா தொற்றால் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக கொரோனா தொற்றானது, தீவிரம் அடைந்து, அது 2 வது அலை மற்றும் 3 வது அலையாக பரவி வந்தது.

இதையடுத்து, 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றைய தினம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 100 க்கு கீழ் குறைந்து உள்ளது. 
அந்த வகையில் தமிழகத்தில் நேற்று 95 பேர் மட்டுமே புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக தமிழக சுகாதாரத்துறை கூறியிருந்ததை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, அங்கிருந்து சென்னை தரமணி டிஎல்எப் அலுவலகத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்குள்ள ஸ்டான்டர்டு சார்ட்டர்டு அலுவலக வளாகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னதாக அடிக்கல் நாட்டினார். 

அங்கு, 27 ஏக்கரில் கட்டப்படும் வளாகத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய டிஎல்எப் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

அதாவது, வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் ஐடி நிறுவனங்கள் பெருமளவு முதலீடு செய்யவும், 20 லட்சம் பேருக்கு வேலை இங்கு வாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன், அமைச்சர் தங்கம் தென்னரசு, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, டிஎல்எப் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.