டெல்லியில் கட்டப்பட்டுள்ள தி.மு.க. கட்சி அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2-ம் தேதி டெல்லி செல்கிறார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் சேர்த்து 7 எம்.பி.க்களை பெற்றிருந்தால், அக்கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்க மத்திய அரசு கடந்த 2006-ம் ஆண்டு முடிவு செய்தது.

இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு டெல்லியில் உள்ள தீன் தயாள் உபாத்தியாயா மார்க் பகுதியில், தி.மு.க. அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது. இந்த இடம் பா.ஜ.க. தலைமை அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் சென்னையில் இருப்பது போன்று தி.மு.க. அலுவலகமான அண்ணா அறிவாலயம் அமைப்பதற்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே டெல்லி சென்று பார்வையிட்டார். தற்போது இந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது.

மேலும் கடந்த ஜனவரி மாதம் டெல்லி அண்ணா அறிவாலயம் திறக்கப்பட இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக திறந்து வைக்கப்படவில்லை. இந்தநிலையில் அடுத்த மாதம் ஏப்ரல் 2-ம் தேதி டெல்லி அண்ணா அறிவாலயத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2-ம் தேதி டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

அதனைத்தொடர்ந்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின், தற்போது 3-வது முறையாக டெல்லி செல்ல உள்ளார். டெல்லி அண்ணா அறிவாலயம் திறப்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேற்கு வங்காள முதல்வர்  மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலருக்கும் தி.மு.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட இருக்கிறது. மேலும் தேசிய அளவில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுக்க இருக்கிறார்.

மேலும் 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 3 மாடி கட்டிடங்களை கொண்ட டெல்லி அண்ணா அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதி பெயரில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்திற்கு யார் வேண்டுமானாலும் சென்று புத்தகங்களை படிக்கும் அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து புத்தகங்கள் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட இருக்கிறது. மேலும் கணினி வழியாக புத்தகங்களை படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் கட்சி அலுவலக திறப்பு விழா பயணமாக இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. சமீபத்தில் 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை உருவாக்கும் வகையில் முதலமைச்சரின் பயணம் அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.