தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகர்களாகவும் தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளாகவும் உயர்ந்திருக்கும் தளபதி விஜய் மற்றும் அஜித் குமார் இருவரின் திரைப்படங்கள் வெளியாகும் சமயங்களில் திரையரங்குகள் திருவிழா கோலம் கொள்ளும். அதிலும் இந்த முறை பொங்கல் திருவிழாவில் ரிலீஸ் ஆகும் தளபதி விஜயின் வாரிசு மற்றும் அஜித்குமாரின் துணிவு ஆகிய திரைப்படங்களை ரசிகர்கள் இன்னும் கோலாகலமாக கொண்டாட இருக்கின்றனர்.

மேற்கொண்ட பார்வை மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்களின் வரிசையில் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறை அஜித் குமார் இணைந்துள்ள திரைப்படம் துணிவு. முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் வாரிசு. இரண்டு படங்களின் ட்ரெய்லர்களும் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்ப்பையும் நிறைய விமர்சனங்களையும் பெற்றுள்ளன.

இரு துருவங்களாக திகழும் இரு பெரும் நட்சத்திர நடிகர்களின் படங்களும் ஒரே தினத்தில் வெளியாவதால் சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கு இடையே காரசாரமான விவாதங்களும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பேசிய துணிவு திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். 

முன்னதாக, “துணிவு திரைப்படத்தை பார்த்தேன் அது எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது என் படம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என பேசியிருந்த தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் தொடர்ந்து பேசும்போது, “வாரிசு திரைப்படத்திற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நிறைய பண்டிகை சமயங்களில் இரண்டு மூன்று திரைப்படங்கள் ஒன்றாக வெளிவரும். ஹிந்தி சினிமாவிலும் மூன்று நான்கு திரைப்படங்கள் பண்டிகை சமயங்களில் வெளிவரும் இதில் எந்த தவறும் கிடையாது.” என தெரிவித்துள்ளார். போனி கபூரின் அந்த முழு பேட்டி இதோ…