சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கிறார் தனுஷ். D43 என அறிவிக்கப்பட்ட இந்த படத்தில் டைட்டில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் பூஜையுடன் சென்னையில் படப்பிடிப்பை துவங்கியது படக்குழு. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. க்ரைம் திரில்லரான இந்த படத்தில் தனுஷ் பத்திரிகையாளர் ரோலில் நடிக்கவுள்ளார் என பேசப்படுகிறது.  

படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். படத்தின் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்துக்கான பொறுப்பைப் பாடலாசிரியர் விவேக் ஏற்றுள்ளார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்துக்காக 3 பாடல்களின் பணிகளை கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே ஜி.வி.பிரகாஷ் முடித்துக் கொடுத்துவிட்டார். 

D43 ஆல்பம் நன்றாக உருவாகி வருவதாகவும், சாலிட்டான ஆல்பமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் ஜிவி பிரகாஷ். தனுஷ் பாடிய பாடலுடன் படப்பிடிப்பை துவங்கினர் படக்குழுவினர்.  கடந்த வாரம் இந்த படத்தின் முதல் பாடலை படமாக்கி முடித்துவிட்டனர். இந்த சுவையூட்டும் செய்தியை டான்ஸ் மாஸ்டர் ஜானி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் படக்குழுவினரின் புதிய அறிவிப்பு தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. சூரரைப் போற்று படத்தில் நடித்த கிருஷ்ணகுமார் D43 படத்தில் இணைந்துள்ளார். இந்த அறிவிப்பை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர் தனுஷ் ரசிகர்கள். 

சுதா கொங்கரா இயக்கத்தில் தீபாவளி விருந்தாய் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. அமேசான் பிரைமில் வெளியான இந்த படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, பரேஷ் ராவல், காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 
நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் பணிகளை செய்திருந்தார். இந்த படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்தவர் கிருஷ்ணகுமார். பைலட் பாத்திரத்தில் படம் முழுக்க வலம் வந்திருப்பார். தற்போது இவர் தனுஷுடன் இணைந்திருப்பது படத்திற்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே இந்திப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் தனுஷ். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி அசத்தியது குறிப்பிடத்தக்கது.