'நானும் ரவுடிதான்' படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி, பார்த்திபன் சேர்ந்து நடிக்கும் இரண்டாவது படம் 'துக்ளக் தர்பார்'. அறிமுக இயக்குநர் பிரசாத் தீனதயாளன் இந்த படத்தை இயக்கி வருகிறார். ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பிக்பாஸ் சம்யுக்தா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.  இந்த படம் முழுக்க முழுக்க அரசியலை பின்னணி கொண்ட படமாக உருவாகி வருகிறது. 


கடந்த ஜூலை மாதத்தில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த படத்தில் 'ராசிமான்' என்ற கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார். 


டீசரில் வரும் ஒரு காட்சியில் 'ராசிமான்' என்ற பெயர் எழுதிய போஸ்டர்களை எல்லாம் கிழிப்பது போன்று ஒரு காட்சி இடம்பெற்று உள்ளது. மேலும் கட்சிக்கு சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறங்களில் கட்சி கொடி காட்டப்பட்டு இருக்கும். குறிப்பாக போஸ்டரில் 'புலி இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்' என்றும் எழுதப்பட்டு இருக்கும். 

இதனால் கொதிப்படைந்த தமிழர் கட்சியினர் படத்துக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.


இந்நிலையில் , நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை இக்காட்சியில் கிண்டல் செய்து இருப்பதாக உள்ளது என்று அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் இப்படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 


இதன் பிறகு நடிகர் பார்த்திபன்  தனது ட்விட்டர் பக்கத்தில் ,  "நண்பர் சீமான் அவர்களிடம் நேரிடையாக துக்ளக் தர்பார் குறித்து விளக்கமளித்து விட்டேன். அவரும் பெருந்தன்மையாக பதில் அளித்தார். 


ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டுமென்று வைக்கப்பட்டதல்ல. அப்படி இருந்திருந்தால் அதற்கு நானே இடந்தந்திருக்க மாட்டேன். இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல.(புதிய பாதை நமது)இருப்பினும் இடையராது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடைய போராடும்' நாம் தமிழர்' தோழர்களின் முயற்சிகளை கிண்டல் செய்யவோ விமர்சிக்கவோ நான் இடம் தரமாட்டேன். 


எனவே உள்நோக்கமின்றி நடந்த பெயர் பிரச்சனையை இயக்குனரிடம் கூறி,ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன்." என்று தெரிவித்து இருக்கிறார்.