விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த ஆண்டு காதலர் தினத்தன்று இதன் அறிவிப்பு வெளியானது. கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படவே திட்டமிட்டபடி படப்பிடிப்பை துவங்க முடியாமல் போனது. இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது. செவன் ஸ்க்ரீன் நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. 

சென்னையில் நடந்த பூஜையில் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி தயாரிப்பாளர் லலித் குமார் ஆகியோர் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்வேதா சாபு சிரில் கலை இயக்கம் செய்கிறார். 

கடந்த மாதம் நடிகை சமந்தா படக்குழுவுடன் இணைந்தார். ஹைதராபாத்தில் நடந்த இந்த படப்பிடிப்பில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த படத்தில் நடிக்க முடியாது என்று நடிகை சமந்தா கூறியதாக முன்பு செய்திகள் இணையத்தில் கசிந்தது. படத்தின் பூஜை நாளில் வெளியான அறிவிப்பு போஸ்டரில் சமந்தாவின் பெயரை பார்த்ததில் மகிழ்ச்சியடைந்தனர். 

இந்நிலையில் விஜய் சேதுபதியின் பிறந்தநாளான நேற்றையை நாளில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். காதில் கடுக்கன், டிசர்ட் என கிளாஸான லுக்கில் உள்ளார் விஜய் சேதுபதி. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியும், நயன்தாராவும் சேர்ந்து நடித்த நானும் ரௌடி தான் படம் ஹிட்டானது. அதனால் இந்த வெற்றிக் கூட்டணியில் உருவாகும் காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. இயக்கத்தில் அசத்தும் விக்னேஷ் சிவன் தயாரிப்பு பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். கூழாங்கல் மற்றும் ராக்கி போன்ற சிறந்த படங்களை கைப்பற்றி ரிலீஸ் செய்யவுள்ளார்.