தல அஜித் தற்போது H. வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். படக்குழு புனேவில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் அஜித் அண்மையில் வாரணாசிக்கு சென்றது தெரிய வந்துள்ளது. தொப்பி, மாஸ்க் அணிந்து சுற்றுலாப் பயணி போன்று ஜாலியாக வாரணாசியை சுற்றிப் பார்த்துள்ளார் நம் தல. அப்பொழுது பிரபல சாட் கடைகள் இருக்கும் பகுதிக்கு அஜித் சென்றிருக்கிறார். ஒரு கடைக்கு சென்று பனாரசி சாட் கேட்டுள்ளார். 

கடை உரிமையாளர் ஷுபம் கேசரிக்கு தன்னிடம் சாட் கேட்ட ஆள் யார் என்று முதலில் தெரியவில்லை. மாஸ்கை கழற்றிய பிறகே அஜித் என்று தெரிந்து சந்தோஷப்பட்டுள்ளார். அஜித் வந்தது குறித்து ஷுபம் கூறியதாவது, அவர் என் கடைக்கு வந்ததில் ரொம்ப சந்தோஷம். அவர் பனாரசி சாட் வகைகளை விரும்பி சாப்பிட்டார். அதிலும் குறிப்பாக டமாடர் சாட் அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. என் கடை சாட் பிடித்துப் போய் மறுநாளும் வந்தார். பிற சுற்றுலாப் பயணிகளை போன்று அவரும் நின்று கொண்டு தான் சாப்பிட்டார்.

அந்த சாட் வகைகளை நான் எப்படி தயாரிக்கிறேன் என்பதை கேட்டு அதை தன் செல்போனில் வீடியோ எடுத்தார் என்றார். சாட் கடைக்காரர் அஜித்துடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் தன் நண்பர்களுடன் சேர்ந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் அஜித்.

வலிமை படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியப் போகிறது. ஆனால் இன்னும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே வெளியாகவில்லை. இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்த பிறகே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்டேட் விவகாரம் தொடர்பாக வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மீது அப்செட்டில் உள்ளார்கள் தல ரசிகர்கள். 

கடைசியாக அஜித் தன் வலிமை குடும்பத்துடன் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலானது. அது படக்குழு வெளியிட்டது இல்லை. இருப்பினும் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்தனர்.  அந்த புகைப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக் இல்லாமல் மிக இளமையாக இருந்தார் அஜித். 

சமீபத்தில் வலிமை திரைப்படத்தின் இசைக்கோர்ப்பு பணிகள் தொடங்கியிருப்பதை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருந்தார் யுவன் ஷங்கர் ராஜா. வலிமை படத்தை பான் இந்தியா படமாக வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிப்பதாக கூறப்படுகிறது. 

வலிமை படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி பாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.