தெலுங்கு திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் நானி தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாமல் தமிழ், மலையாள திரை உலக ரசிகர்கள் மத்தியிலும் மிக பிரபலம் அடைந்தவர். குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்த நான் ஈ, ஜெர்ஸி, கேங் லீடர் உள்ளிட்ட திரைப்படங்கள் பல மொழிகளிலும் கவனத்தை ஈர்த்தது.

முன்னதாக கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த டக் ஜெகதீஷ் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் நானி நடிப்பில் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியான ஷியாம் சிங்கா ராய் படம் அனைத்து ரசிகர்களின் கவனத்தை பெற்று சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது.

இந்த வரிசையில் அடுத்ததாக நானி நடிப்பில் தயாராகியுள்ளது அன்டே சுந்தரனிக்கி திரைப்படம். விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானியுடன் இணைந்து கதாநாயகியாக நடிகை நஸ்ரியா நசீம் நடிக்க, ஹர்ஷவர்தன், சுஹாஷ், நதியா மற்றும் ராகுல் ராமகிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் அன்டே சுந்தரனிக்கி திரைப்படத்திற்கு நிக்கேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, விவேக் சாகர் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் அன்டே சுந்தரனிக்கி படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கதாநாயகனான நானி இதனை அறிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்புத் தளத்திலிருந்து ஷூட்டிங்கை நிறைவு செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ…