தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராகத் திகழும் நடிகர் சீயான் விக்ரம், ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களை அவரை விட சிறப்பாக யாரும் நடித்துவிட முடியாது என சொல்லுமளவிற்கு இந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடிப்பவர். அடுத்ததாக தமிழ் திரை உலகின் மிக முக்கிய இயக்குனரான பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.

முன்னதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பல விதமான கெட்டப்புகளில் கோப்ரா படத்திலும், இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ஆதித்த கரிகாலன் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் மிகப் பிரம்மாண்ட படைப்பாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் விக்ரம் நடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மகான். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ள மகான் திரைப்படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபிசிம்ஹா, சனந்த் மற்றும் தீபக் பரமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ள மகான் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகான் திரைபடம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகான் திரைப்படத்தின் கதை தற்போது வெளியாகி உள்ளது. “குடும்பத்தைப் பிரிந்து தனது சிந்தனைக்கு ஏற்ற ஒரு வாழ்க்கையில் தனிப்பட்ட சுதந்திரத்தோடு திரியும் ஒரு நபரின் கதையே மகான்.  ஒரு வழியாக அவனது குறிக்கோள் என்ன என உணரும் நேரத்தில் அவன் மகனை இழந்ததையும் உணர்கிறான். கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற கனவை அவன் பூர்த்தி செய்த பிறகு, நல்ல தந்தையாக இருக்க வாழ்க்கை மீண்டும் அவனுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறதா?  எதிர்பாராத திருப்பங்கள் & சம்பவங்கள் நிறைந்த  த்ரில்லான அவனது வாழ்கையின் அதிரடியான பயணம் தான் இந்த மகான் கதை”. அமேசான் பிரைம் வீடியோவின் ப்ரஸ் ரிலீஸ் மூலமாக இந்த கதை தெரியவந்துள்ளது. மேலும் மகான் திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.