தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராகவும் ஆகச் சிறந்த நடிகராகவும் வலம் வரும் நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பாலா உடன் இணைந்து புதிய படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு(2021) தீபாவளி வெளியீடாக வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் சர்வதேச சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையாகாது. இயக்குனர் T.J.ஞானவேல் இயக்கத்தில் மலை கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான ஜெய்பீம் திரைப்படம் அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தது.

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில், S.R.கதிர் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பில், ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து லிஜோமொள் ஜோஸ், ராஜிஷா விஜயன், மணிகண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.முன்னதாக சர்வதேச திரைப்பட விருதுகளில் ஒன்றான கோல்டன் க்ளோப் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்ற ஜெய் பீம் திரைப்படம் இறுதிப் பட்டியலில் இடம் பெறாமல் போனது.

மேலும் உலக சினிமாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஜெய்பீம் படத்தின் காட்சிகளை இயக்குனர் விவரிக்கும் வீடியோவை வெளியிட்டு ஜெய்பீம் படத்தை ஆஸ்கார் கௌரவித்தது. இதனையடுத்து ஆஸ்கார் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 276 திரைப்படங்களின் பட்டியலில் ஜெய் பீம் திரைப்படம் இடம்பெற்றுள்ளது. இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் ஆஸ்கார் விருதுக்கான இறுதிப் பட்டியலில் ஜெய்பீம் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நொய்டா சர்வதேச திரைப்பட விருது விழா 2022-ல் ஜெய்பீம் திரைப்படம் மூன்று விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த நடிகராக நடிகர் சூர்யாவும், சிறந்த நடிகையாக நடிகை லிஜோமொள் ஜோஸ்ஸும், ஜெய்பீம் திரைப்படம் சிறந்த திரைப்படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜெய்பீம் படக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. விரைவில் ஆஸ்கார் குறித்த நற்செய்தி வரும் என எதிர்பார்ப்போடு காத்திருப்போம்.