சாப்ட்வேர் என்ஜினியர் குடும்பத்தினருடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், 3 பேரின் நெற்றியிலும் குங்குமத்தால் கோடுகள் இருந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தான் இப்படி சம்பவம் அரங்கேறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள அமீன்பூரைச் சேர்ந்த 42 வயதான ஸ்ரீகாந்த் கவுட், அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வந்தார். 

சாப்ட்வேர் என்ஜினியர் ஸ்ரீகாந்த் கவுட்டின் மனைவி அனாமிகா, அங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு 7 வயதில் ஸ்னிகித்தா என்ற ஒரு மகள் இருந்தார். இப்படியாக, இவர்கள் 3 பேருதாக வாழ்ந்து வந்தனர். 

இப்படியான சூழலில் தான், கடந்த 20 ஆம் தேதி அன்று, இவர்களின் வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்து உள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். 

அப்போது, அந்த வீட்டின் உள்ளே அவர்கள் 3 பேரும் மிகவும் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். 

இந்த சம்பத்தில், “இவர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாகவே” முதலில், போலீசார் நினைத்திருந்தனர். ஆனால், அந்த வீட்டில் நடந்த சோதனையில் அவர்களது வீட்டில் இருந்த சாமி படங்கள் தலை கீழாக கவிழ்க்கப்பட்டு தரையில் கிடந்ததை போலீசார் கண்டுப்பிடித்தனர். 

குறிப்பாக, உயிரிழந்த 3 பேரின் நெற்றியிலும் குங்குமத்தால் கோடுகள் வரையப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், 'ஒருவேளை இந்த வீட்டில் நரபலி அல்லது அமானுஷ்ய சடங்குகள் இங்கு நடந்திருக்கலாம்” என்றும், சந்தேகம் அடைந்து உள்ளனர். 

இதையடுத்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த வீட்டின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் அக்கம் பக்கத்தினர் கூறும் போது, ”உயிரிழந்த சாப்ட்வேர் என்ஜினியர் ஸ்ரீகாந்த் குடும்பத்தினருக்கு, அந்த அளவுக்கு கடவுள் பக்தி கிடையாது” என்றும், தெரிவித்து உள்ளனர்.

அத்துடன், “இங்குள்ளவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் என்றால், சாப்ட்வேர் என்ஜினியர் ஸ்ரீகாந்தின் மனைவி அனாமிகா தான் நல்ல ஆலோசனை வழங்குவார்” என்றும், அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். 

மேலும், “ஸ்ரீகாந்தின் குடும்பத்தினருக்கு எந்த மூடநம்பிக்கை பழக்கமும் கிடையாது என்றும், கணவன் - மனைவி இருவருமே நன்றாக படித்தவர்கள் என்றும், ஆனால் பண்டிகைகளை இயல்பாக அவர்கள் கொண்டாடுவார்கள்” என்றும், அவர் கூறியுள்ளனர.

“இவர்களது திருமணம், காதல் திருமணம் என்றும், இந்த வீட்டின் மதிப்பு 1.5 கோடி ரூபாய் இருக்கும்” என்றும், பல்வேறு தகவல்களை அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.

முக்கியமாக, “இவர்கள் கடந்த 18 ஆம் தேதி உயிரிழந்திருக்கலாம்” என்று, போலீசார் கருதுகிறார்கள்.

ஒருவேளை இவர்கள் தற்கொலை செய்திருந்தால், அதற்கான கடிதம் ஏதேனும் அந்த வீட்டில் இருக்கிறதா?” என்றும், போலீசார் தீவிரமா தேடியதில் அந்த வீட்டில் ஒன்றும் கிடைக்கவில்லை” என்றும், கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.