தேசிய பெண் குழந்தைகள் தினம் முன்னிட்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

national girl child day

சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி முதல் ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் கொண்டாடப்படும் இந்நாள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டு, இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அவர்களுக்கு நேரும் பிரச்சினைகளைத் தடுப்பது, பெண் குழந்தைகளுக்கான கல்வியை உறுதி செய்வது ஆகியவை இந்நாளின் நோக்கமாகும்.

தேசிய பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக, மத்திய மந்திரி அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் “பிரமர் மோடி, பெண்கள் மேம்பாடு பற்றிய சிந்தனையை பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான தீர்மானமாக மாற்றி வாய்ப்புகளின் கதவுகளைத் திறந்தார். இன்று நாட்டின் மகள்கள் ஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் பெயரை ஒளிரச் செய்கிறார்கள். 'தேசிய பெண் குழந்தைகள் தினத்தில்', நாட்டு பெருமைக்குரிய இந்தியாவின் ஒவ்வொரு மகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து நிதின் கட்கரி தனது  சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “உறுதியுடனும், திறமையுடனும், லட்சியத்துடனும் நாட்டின் மகள்கள் இன்று ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் தலைமையிலான எங்கள் அரசாங்கம் 'பெண்கள் தலைமையிலான மேம்பாட்டிற்காக' தொடர்ந்து பாடுபட்டு வருகிறது” என பதிவிட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “தேசிய பெண் குழந்தைகள் தினத்தில், நாளைய பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாக உறுதியளிப்போம், மேலும் அனைத்து உயரங்களையும் அடையும் சக்தியை அவர்களுக்கு வழங்குவோம்” என பதிவிடபட்டுள்ளது.

இந்நிலையில் பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம் என்பதை  இந்த சமூகம் நிரூபிப்பதற்கு அடித்தளமாக இந்த சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம். பால் கொடுத்து வளர்க்கும் பெண் குழந்தைகள் பாலின தொந்தரவிற்கு ஆளாகாமல் பாதுகாப்பை இந்த சமூகம் வழங்க வேண்டுமென உறுதியேற்போம். புதிய இந்தியாவை படைப்பதில் பெண்களின் பங்கு இருப்பதை உறுதியேற்போம். அனைவருக்கும் சர்வதேச பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் என்று சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுருந்தார்.