2012-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மனம் கொத்தி பறவை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஆத்மியா. கேரளத்து வரவான இவரது ஹோம்லி லுக் ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்தது. இதைத் தொடர்ந்து போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்தில் நடித்த ஆத்மியா அதன் பிறகு மலையாள படங்களில் கவனம் செலுத்தினார்.

அங்கு அமீபா, ஜோசப் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார். கடந்த 2018-ம் ஆண்டு மார்க்கோனி மாத்தாய் எனும் மலையாள படத்தில் நடித்து அசத்தினார். இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கௌரவ பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு கொரோனா லாக்டவுன் காலத்தில் கால் சென்டரில் பணிபுரிந்து, மக்களுக்கு சேவை செய்ததற்காக பாராட்டுகளையும் பெற்றார்.

இந்நிலையில் தற்போது ஆத்மியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கன்னூரைச் சேர்ந்த கப்பலில் பணிபுரியும் சனூப் என்பவரை இவர் திருமணம் செய்துக் கொள்கிறார். இவர்களது திருமணம் ஜன 25-ம் தேதி கன்னூரில் காலை 9.59 மணி முதல் 11.33 மணிக்குள் நடைபெற இருக்கிறது. பெற்றோர்கள் நிச்சயித்த இந்த திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி, ஜனவரி 26-ம் தேதி அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கவுள்ளதாம். 

சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் வெள்ளை யானை படத்தில் நடித்துள்ளார் ஆத்மியா. விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், இன்றைய வாழ்வில் விவசாயம் எவ்வளவு அழிந்து வருகின்றது என்பதை உணர்ந்தும் கதை தான் இந்த வெள்ளை யானை. யோகிபாபு முக்கிய ரோலில் நடித்துள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தற்போது 2 மலையாள படங்களை கைவசம் வைத்திருக்கும் ஆத்மியா, திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பார் என்று கூறப்படுகிறது. திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் ஆத்மியாவிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.