நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் , மசினகுடி பகுதியில் கடந்த சில மாதங்களாக சுமார் 40 வயதான ஆண் காட்டு யானை முதுகில் பலத்த காயத்துடன் சுற்றி வந்தது. அந்த வனத்துறையினர் பழங்களுக்குள் மருந்து மாத்திரைகளை மறைத்து வைத்து தொடர்ந்து வழங்கி வந்தனர். இந்நிலையில் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் அடைந்து, மசினகுடி ஊர்பகுதிகளில் நடமாடி வந்தது.  

3 மாதங்களுக்கு முன்பு யானையை காட்டுக்குள் திருப்பியனுப்ப டயரில் தீவைத்து கொளுத்தி யானை மீது வீசியதில் அதன் காது, முதுகு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. 3 மாதங்களாக முதுகில் காயங்களுடன் சுற்றித்திரிந்த யானை ஜனவரி 19ஆம் தேதி உயிரிழந்தது. தீயில் யானை வலியால் துடிக்கும்  வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் தீவைத்ததாக 2 பேரை வனத்துறை கைதுசெய்துள்ளது. 


இந்த கொடூர செயலுக்கு பல தரப்பினரும் பெரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “காடுகள் கொன்று நாடுகள் ஆக்கினோம். காட்டு உயிர்களின் கதியை மறந்தோம். உயிரோடு எரிக்கும் வழக்கம் எப்படி வந்தது? பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா? மரணத்தைச் சுமந்துபோன யானையின் ஓலம் அலைக்கழிகிறது. காலம் தலைகுனிகிறது” என்று பதிவிட்டுள்ளார்.