மகாநதி படத்தின் வெற்றிக்கு பிறகு உலகளவில் பிரபலமான நடிகையாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். சிறந்த நடிப்பிற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதன் பின் பல பாலிவுட் பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தது. சமீபத்தில் இவரது நடிப்பில் பெண்குயின் திரைப்படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் குட் லக் சகி. இதன் டீஸர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இயக்குனர் நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆதி மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்தில் துப்பாக்கிச் சூடு வீராங்கனையாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். ஜூன் 3-ம் தேதி இந்த படம் திரைக்கு வரவுள்ளது. கீர்த்தி கூறிய இந்த நற்செய்தியால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் ரசிகர்கள்.

இதனைத் தொடர்ந்து மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் சர்காரு வாரி பாட்டா படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் கீர்த்தி. இதுதவிர்த்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். சூரி, பிரகாஷ் ராஜ், மீனா, சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். 

படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதெராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்தது. லாக்டவுன் பிரச்சனையால் அண்ணாத்த படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டார்கள். 2021ம் ஆண்டு தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக அண்ணாத்த ரிலீஸாகும் என்று அறிவிப்பு வெளியானது.