ஆகச் சிறந்த நடிகராக படத்திற்குப் படம் தரமான கதாபாத்திரங்களையும் நல்ல கதை களங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் கார்த்தி தற்போது தமிழ் மக்கள் மத்தியில் வந்தியத் தேவனாக வசீகரித்து வருகிறார். ஆம், இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பாக சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் வல்லவரையன் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் கார்த்தியின் நடிப்பை அனைவரும் வெகுவாக பாராட்டியுள்ளனர். அடுத்ததாக குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படங்களின் இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இரும்புத்திரை மற்றும் ஹீரோ படங்களின் இயக்குநர் PS.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் சர்தார்.

அட்டகாசமான இரண்டு கதாபாத்திரங்களில், பலவிதமான கெட்டப்புகளில், இரட்டை வேடத்தில் நடித்துள்ள கார்த்தியுடன் இணைந்து ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் சங்கி பாண்டே, முனிஸ்காந்த், இளவரசு, முரளி சர்மா ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட, தீபாவளி வெளியீடாக ரிலீசாகவுள்ள சர்தார் திரைப்படத்தை பிரின்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்யும் சர்தார் படத்திற்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சர்தார் திரைப்படத்தின் முதல் பாடலாக நடிகர் கார்த்தி பாடியுள்ள ஏறுமயிலேறி எனும் பாடல் சற்று முன் வெளியானது. அசத்தலான அந்த பாடல் இதோ…