டான் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அட்டகாசமான திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வகையில் முன்னதாக மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தற்போது மாவீரன் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்து உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

முன்னதாக முதல் முறை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் KV.அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ப்ரின்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற 21-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. சிவகார்த்திகேயனுடன் இணைந்து மரியா ரிபோஷப்கா கதாநாயகியாக நடிக்கும் ப்ரின்ஸ் திரைப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி, ஆனந்தராஜ், சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள,ப்ரின்ஸ் திரைப்படத்திற்கு பிரவீன்.KL படத்தொகுப்பு செய்துள்ளார். தமன்.S இசையமைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வெகு விரைவில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது

ப்ரின்ஸ் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற்றது. விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் விரைவில் பிளாக்பஸ்டர் இயக்குனர் வெங்கட்பிரபு உடன் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.