தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான நடிகர் கலையரசன் இயக்குனர் மிஷ்கின் இயக்கி நடித்து வெளிவந்த நந்தலாலா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, அட்டகத்தி, முகமூடி, மதயானைக்கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் கலையரசன் குறிப்பிடப்படும் கதாபாத்திரங்களில் நடித்தார். 

மேலும் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களிலும் கதாநாயகனாகவும் நடித்து வந்த கலையரசன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி, தனுஷின் ஜகமே தந்திரம், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் நடித்து விரைவில் ரிலீசாக உள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கலையரசன், கதாநாயகனாக நடித்துள்ள டைட்டானிக் காதலும் கவுந்து போகும் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

மேலும் சிலம்பரசன் & கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள பத்து தல படத்திலும் கலையரசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிகர் கலையரசன் நடித்துள்ள திரைப்படம் குதிரைவால். கலையரசனுடன் இணைந்து காலா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை அஞ்சலி பாட்டில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

இயக்குனர் பா.ரஞ்சிதின் நீலம் புரோடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள குதிரைவால் படத்தை மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் இணைந்து இயக்கியுள்ளனர்.கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள குதிரைவால் படத்திற்கு பிரபல பாடகர் பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில்  வருகிற மார்ச் 18-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள குதிரைவால் திரைப்படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.