சின்னத்திரை வாயிலாக மக்களின் மனதில் இடம் பிடித்த சிவகார்த்திகேயன் வெள்ளித்திரையில் தற்போது நட்சத்திர நாயகனாக வலம் வருகிறார்.  அந்தவகையில் அடுத்ததாக தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் பிரபல தெலுங்கு இயக்குனர் KV.அனுதீப் இயக்கத்தில் #SK20 படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத்தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் #SK21 திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். முன்னதாக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் வருகிற மே 13ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஏலியன்-சயின்ஸ் ஃபிக்ஷன் காமெடி திரைப்படமாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் அயலான். KJR ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் அயலான் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்க, இஷாகோபிகர், ஷரட் கெல்கர், யோகிபாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள அயலான் படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் நடிகை இஷா கோபிகர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அயலான் திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் இதர தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அந்தப் பேட்டியில், அயலான் திரைப்படம் முதல் முறை இந்தியாவில் சயின்ஸ் பிக்சன் ஏலியன் திரைப்படமாக கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளதாகவும், 100 கோடி பட்ஜெட்டில் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வெளியாகும் வகையில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அயலான் படம் குறித்து இஷாகோபிகர் பேசிய வீடியோ இதோ…