தலித் சிறுவனை காலை நக்க வைத்து வீடியோ துன்புறுத்தல்! உயர் சாதி இளைஞர்கள் வெறிச்செயல்..

தலித் சிறுவனை காலை நக்க வைத்து வீடியோ துன்புறுத்தல்! உயர் சாதி இளைஞர்கள் வெறிச்செயல்.. - Daily news

தலித் சிறுவனை காலை நக்க வைத்து, உயர் சாதி இளைஞர்கள் சிலர் கொடூரமான செயலில் ஈடுபட்டு, அதனை வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் ஜாதி அடிப்படையிலான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதாக, தொடர்ச்சியாக கூறப்பட்டு வந்தது.

அதன் தொடர்ச்சியாக, ரேபரேலியில் தற்போது மேலும் ஒரு ஜாதி ரீதியிலான கொடுமையான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரேபரேலி பகுதியைச் சேர்ந்த பட்டியலின சிறுவன் ஒருவன், அங்குள்ள ஒரு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

10 ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவனின் தந்தை உயிரிழந்து விட்ட நிலையில், இந்த மாணவன் தாயுடன் வசித்து வருகிறார்.

இப்படியான சூழலில் இந்த மாணவனின் தாய், அங்குள்ள உயர் சாதியினரின் விவசாய நிலத்தில் கடந்த சில நாட்களாக வேலை பார்த்து வந்து உள்ளார்.

ஆனால், அவர் பார்த்த அந்த வேலைக்கான கூலி அவருக்கு தரப்படாமல் இருந்து உள்ளது. இதனால், தாயாருக்கு சேர வேண்டிய வேலைக்கான கூலியை கேட்டு, அந்த மாணவன் குறிப்பிட்ட அந்த நபர்களின் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு உள்ளார்.

அப்போது, அந்த வீட்டில் இருந்த உயர் சாதி இளைஞன், தனது சக நண்பர்கள் மற்றும் உறவு முறை கொண்ட மற்ற உயர் சாதி இளைஞர்களுடன் சேர்ந்து, கூலி கேட்டு வந்த இந்த மாணவனை கொடூரமான முறையில் அடித்து தாக்கி உள்ளனர்.

குறிப்பாக, அந்த 10 ஆம் வகுப்பு மாணவனை அடித்து உதைத்து அந்த மாணவனின் சாதிப் பெயரைச் சொல்லி கடுமையான சொற்களைக்கொண்டு திட்டுகிறார்கள். 

இதனால், அந்த சிறுவன் பயந்து நடுங்கி கீழே அப்படியே கீழே உட்கார்ந்து உள்ளார். இதனைப் பார்த்த அங்கு நின்றிருந்த உயர் சாதி இளைஞர்கள், அந்த மாணவனின் பயத்தைப் பார்த்து கை தட்டி சிரிக்கிறார்கள். 

அப்போது, அங்கு ஒரு பைக்கில் உட்கார்ந்திருந்த ஒரு இளைஞன், அந்த மாணவனுக்கு தண்டனை தருகிறேன் என்று கூறி, “தனது கால்களை நக்கச் சொல்கிறார்”. இதனால், பயந்து நடுங்கிய அந்த 10 ஆம் வகுப்பு மாணவன், பயந்து நடுங்கிக்கொண்டே அந்த இளைஞரின் காலை நக்குகிறார். 

இப்படியான காட்சிகளை உள்ளடக்கிய வீடியோ ஒன்று, சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பெரும் வைரலான நிலையில், தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இதனையடுத்து, அங்கிருந்து வந்த அந்த மாணவன், இந்த சம்பவம் குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

கடந்த 10 ஆம் தேதி நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உயர் சாதியினர் 7 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment